பாலியல் புகாரில் போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே உள்ள கீழகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஆட்லின் அருள் (46). போலீஸ் ஏட்டாக உள்ளார். எஸ்.பி. தனிப்பிரிவு ஏட்டாக இருந்த ஆட்லின் அருள், சிறப்பு தனிப்படையில் உள்ளார். கடந்த 31ம்தேதி அதே பகுதியை சேர்ந்த வினேஷ் (40) மற்றும் அவரது மைத்துனர் நிக்கோம் (35) ஆகிய இருவரையும் சக போலீசாருடன் சேர்ந்து சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு ஆட்டோவில் அழைத்து சென்று தாக்கியதாக புகார் எழுந்தது.

ஏட்டு ஆட்லின் அருள் மற்றும் சக போலீசார் வலுக்கட்டாயமாக வினேசை சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு இழுத்து செல்லும் காட்சிகளும், பின்னர் 108 ஆம்புலன்சில் ஏற்றி அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சிகளும் வைரலானது. வினேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸ் ஏட்டு ஆட்லின் அருள் மற்றும் ஏட்டு சுபாஷ் ஆகிய 2 பேர் மீதும், ஏட்டு ஆட்லின் அருள் அளித்த புகாரின் பேரில் வினேஷ் மற்றும் அவரது மைத்துனர் நிக்கோம் உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கன்னியாகுமரி டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டார்.இந்த விவகாரத்தில் காயமடைந்த வினேசின் மனைவி நதியா, ஏட்டு ஆட்லின் அருள் மீது பாலியல் தொல்லை தொடர்பான புகார் கூறி இருந்தார். இந்த புகார் தொடர்பாக இதுவரை எந்த வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில், ஏட்டு ஆட்லின் அருளை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: