சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: மராட்டியத்தில் 55.72 லட்சம் உழவர்களின் ரூ.36,585 கோடி பயிர்க்கடன்களை அம்மாநில அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. தமிழக அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி திட்டத்தால் 14.22 லட்சம் பேர் பயனடைவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் சில ஆயிரம் பேருக்குக் கூட முழுமையான கடன் தள்ளுபடி கிடைக்காது. பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது என்று நபார்டு வங்கி விதிகளில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை.
பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதற்கு முன்பாக இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து அனுமதி பெற வேண்டும்; தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகையை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு 60 நாள்களுக்குள் மாநில அரசு செலுத்த வேண்டும் என்பது தான் நபார்டு வங்கியின் விதியாகும். தமிழ்நாடு அரசுக்கு உழவர்கள் நலனில் அக்கறை இருந்திருந்தால் இந்த விதிகளை பின்பற்றி முழுக்கடனையும் தள்ளுபடி செய்திருக்க முடியும்.
