மீன்வள பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: மீன்வளப் பட்டதாரிகள் பயிலும் பாடத்திட்டத்தில் உயிரியல், விலங்கியல், சுற்றுச்சூழல் அறிவியல், நீரியல் வள மேலாண்மை, கடல்சார் உயிரியல் மற்றும் பல பாடத்திட்டங்களை கொண்டு பல்வேறு துறைகளில் பணிபுரியத் தேவையான கல்வித் தகுதியைப் பெற்றிருந்தாலும், அதற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரங்களைப் பெறுவதில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் இதுவரை போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது வேதனைக்குரியது.

இந்தியாவின் முதல் மாநில மீன்வளப் பல்கலைக்கழகமாகத் திகழும் இப்பல்கலைக்கழகம், தன்னுடைய பட்டதாரிகள் எந்தெந்த துறைகளில் பணியாற்றத் தகுதி பெற்றவர்கள் என்பதை தெளிவுபடுத்தி, அதற்கான அரசாணைகள் மற்றும் துறைசார் அங்கீகாரங்களை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து பெற்றுத் தர வேண்டிய பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். தற்போது தமிழகத்தில் உள்நாட்டு மீன் வளர்ப்பு, இறால் வளர்ப்பு, கூண்டு மீன் வளர்ப்பு, ஒருங்கிணைந்த விவசாயம்-மீன்வளத் திட்டங்கள் போன்றவை வேகமாக வளர்ந்து வருகின்றன.

இதனால் தகுதி வாய்ந்த மீன்வள நிபுணர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மீன்வளத் துறையின் வளர்ச்சி என்பது வேலைவாய்ப்பு உருவாக்கம் மட்டுமல்ல. எனவே மீன்வளக் கல்வி பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளையும், கல்வித் தகுதிகளுக்கான அங்கீகாரங்களையும் உடனடியாக வழங்க தமிழக அரசும், மத்திய அரசும், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: