கர்நாடக முதலமைச்சராக பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார்: விழாவில் ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

 

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றார். கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் இருந்து வந்தனர். ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருக்க வேண்டும். ஆனால் சித்தராமையா இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக முதல்வராக பதவியில் தொடர்ந்தார்.

இதனால் டி.கே.சிவக்குமாருக்கும், சித்தராமையாவுக்கும் மோதல் ஏற்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன் தேசிய தலைமை தலையிட்டு பஞ்சாயத்தை தீர்த்து வைத்தது. அதன் தொடர்ச்சியாக புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார். மாணவர் தலைவராக தனது அரசியல் பயணத்தை 1980களில் தொடங்கிய இவர், 1985ம் ஆண்டு தேர்தலில் பின்னடைவை சந்தித்தாலும், 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் 27 வயதில் முதல்முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றார்.

அதன்பின்னர் வொக்கலிகா சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தனது செல்வாக்கை நிலைநாட்டி, தொடர்ச்சியாக 8 முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி மற்றும் 2017ம் ஆண்டு குஜராத் ராஜ்யசபா தேர்தலின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை பாதுகாத்து கட்சியின் வியூகம் வகுப்பதில் வல்லவர் என பெயர் பெற்றார். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார்.

டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சராக பரமேஸ்வர் பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, வேணுகோபால், சித்தராமையா பங்கேற்றனர்.

Related Stories: