ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடல் திடீரென உள்வாங்கியதால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகள் தரை தட்டின. இன்று ராமேஸ்வரம் கடலில் நீர் சுமார் 500 மீட்டருக்கும் அதிகமாக திடீரென உள்வாங்கியது. குறிப்பாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே கடல் உள்வாங்கி காணப்பட்டது. கடற்கரையில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்தால் கடலுக்குள் பக்தர்களால் வீசப்பட்ட சாமி சிலைகள், பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் வெளியில் தெரிந்ததால் பொதுமக்கள் ஆர்வத்துடன் அருகில் சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
திடீரென கடல் உள்வாங்கியதால் கடல்வாழ் உயிரினங்கள் வெளியே தெரிந்தன. கடல் உள்வாங்கியதன் காரணமாக அரிய வகை பவள பாறைகள் ராமேஸ்வரம் கடற்கரையில் தென்பட்டன. மேலும் நட்சத்திர மீன்களும் கண்களுக்கு புலப்பட்டன. இதனிடையே மீனவர்கள் தங்கள் விசை மற்றும் நாட்டு படகுகளுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
காற்றின் திசை வேகம் காரணமாக இந்த கடலின் நீரோட்டம் மாறி, அதன் காரணமாகவே ராமேஸ்வரம் கடல் நீர் உள்வாங்கி காணப்படுவதாகவும், இதுகுறித்து மீனவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் மீன்வளத்துறை அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். எனினும், ஆபத்தை உணராமல் உள்வாங்கி இருக்கும் பகுதிக்கு சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதைத் தவிர்க்க பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளனர்.
