தி.மலையில் கிரிவலம் சென்றபோது கொடூரம்; பியூட்டிசியனை நிர்வாணமாக்கி 3 மணி நேரம் பாலியல் சித்ரவதை; சிறுவன் உள்பட 7 பேர் கைது: செல்போனில் 25க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ; பரபரப்பு தகவல்கள்

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பியூட்டிசியனை நிர்வாணமாக்கி 3 மணி நேரம் பாலியல் சித்ரவதை செய்த சிறுவன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்ய செல்போனில் 25க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண். பியூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார். இவர் தனது தோழியுடன் கடந்த 31ம் தேதி இரவு பவுர்ணமியன்று கிரிவலம் சென்றார். திருநேர் அண்ணாமலை கோயில் அருகே செல்லும்போது பியூட்டிசியன் கால் வலியால் நடக்க முடியாததால் நண்பரை வரவழைத்து அவருடன் பைக்கில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அத்தியந்தல் புதிய பைபாஸ் சாலை வழியாக சென்றபோது 2 பைக்குகளில் வந்த 4 வாலிபர்கள், ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஏரிக்கரை பகுதியில் பியூட்டிசியன் பைக்கை வழிமறித்துள்ளனர். பின்னர் வாலிபரை அடித்து விரட்டி விட்டு, பியூட்டிசியன் அணிந்திருந்த கம்மல், செயின் உள்ளிட்ட நகைகளை பறித்துள்ளனர். பிறகு அவரை நிர்வாணமாக்கி செல்போனில் வீடியோ எடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தங்களுடைய நண்பர்கள் சிலரையும் அங்கு வரவழைத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சுமார் 3 மணி நேரம் இளம்பெண்ணை நிர்வாணமாக அமர வைத்து மிரட்டி உள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து தப்பி வந்த இளம்பெண், திருவண்ணாமலை மேற்கு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் தனிப்படை அமைத்து கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக திருவண்ணாமலை அடுத்த ஆடையூர் கிராமத்தை சேர்ந்த வாசுதேவன் (27) என்பவரை நேற்று கைது செய்து விசாரித்தனர். இவர் மீது திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரது செல்போனை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அவரது நண்பர்களான அடையூரை சேர்ந்த ஆகாஷ், பெரியபாலியப்பட்டு கிராமத்தை சேர்ந்த 17வயது சிறுவன், அஸ்வநாதசுரணை பகுதியை சேர்ந்த அப்பு, லேலே என்கிற அரிகரன், சர்மா, சேந்தமங்கலத்தை சேர்ந்த அருண்குமார், பாவாஜி நகரை சேர்ந்த சிவகணேசன் என்கிற சூர்யா ஆகிய 7 பேரை நேற்று மாலை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

பின்னர் அனைவரையும் மகளிர் கோர்ட் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, 6 பேரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில், 25க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் உள்ளதாக போலீசார் ெதரிவித்தனர். இந்த விவகாரத்தில் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இந்த கும்பல் தனியாக அல்லது ஆண் நண்பர்களுடன் கிரிவலம் செல்லும் இளம்பெண்களை மிரட்டி நிர்வாணப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வீடியோக்கள் எடுத்து பணம், நகைகளை அபகரித்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. தொடரும் சம்பவங்களால் கிரிவல பாதையில் போலீஸ் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தர்மபுரி பெண்ணுக்கும் கொடுமை
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான ஒரு இளம்பெண் கடந்த 30ம் தேதி திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் முடித்து கொண்டு இரவு உறவினருடன் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். திருவண்ணாமலை-செங்கம் சாலையில் பெரியபாளிப்பட்டு அருகே உறவினர் பைக்கை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது பின்தொடர்ந்து வந்த கும்பல், உறவினரை தாக்கி விரட்டினர். பின்னர் இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வீடியோ எடுத்துள்ளனர்.

தொடர்ந்து பல மணிநேரம் அங்கேயே நிர்வாணமாக அமர வைத்து மிரட்டி பணம், நகைகளை பறித்துள்ளனர். இதுதொடர்பாக இளம்பெண், நேற்றிரவு திருவண்ணாமலை மேற்கு போலீசில் புகார் அளித்தார். ஏற்கனவே கைதானவர்கள்தான் இவரிடமும் அத்துமீறலில் ஈடுபட்டு ஆபாச வீடியோ எடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து நடத்தும் தீவிர விசாரணையில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Related Stories: