திருச்சியில் பெண் முகத்தில் முட்டை வீசி 13 சவரன் பறிப்பு

திருச்சி: திருச்சியில் கடைக்குள் புகுந்து பெண் வியாபாரி முகத்தில் முட்டையை வீசி 13 சவரன் நகையை பறித்து 3 மர்மநபர்கள் டூ வீலரில் தப்பி சென்றனர். திருச்சி கே.கே.நகர் ஐயப்பன் நகர், யாசர் தெரு, இலுப்பூர் சாலையை சேர்ந்தவர் மலர்கொடி (51). இவர், அதே பகுதியில் ஒரு தனியார் வணிக வளாகத்தில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அவரது கடைக்கு டூவீலரில் வந்த 3 மர்ம நபர்கள், கடையில் பொருட்கள் விலை குறித்து விசாரிப்பதுபோல் அங்கிருந்த முட்டையை எடுத்து மலர்கொடி முகத்தில் வீசியதோடு,அவர் அணிந்திருந்த 13 பவுன் நகையை பறிக்க முயன்றனர்.

ஆனால் மலர்கொடி நகையை பறிக்க விடாமல் போராடினார். இருப்பினும் 3 பேரும் வலுக்கட்டாயமாக நகையை பறித்துக்கொண்டு டூ வீலரில் தப்பி சென்றனர். இதுதொடர்பாக மலர்கொடி கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: