பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்: காவல் நிலையத்தில் கணவன் மீது தாக்குதல்

* இரண்டரை பவுன் செயின் பறிப்பு; கஞ்சா கேஸ் போடுவதாக மிரட்டல்

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கீழகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் வினேஷ் (40). இவரது மனைவி நதியாவின் (39) தம்பி நிக்கோம் (32) சில நாட்களுக்கு முன் கீழகாட்டுவிளை சந்திப்பில் நின்றிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த கஞ்சா தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் ஏட்டு ஆட்லின் அருள் (46) வந்து அவரை ஆபாசமாக பேசி திட்டி உள்ளார். இதை தட்டிகேட்ட வினேஷை ஏட்டு ஆட்லின் அருள் மற்றும் தனிப்படை போலீசார் சிலர் சேர்ந்து தாக்கி உள்ளனர்.

நிக்கோமையும் தாக்கினர். இருவரையும் ஆட்டோவில் ஏற்றி சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. காவல் நிலையம் வந்ததும், வினேசை தரதரவென இழுத்து காவல் நிலையத்துக்குள் கொண்டு சென்றனர். இந்த தாக்குதலில் ரத்த வாந்தி எடுத்து, வினேஷ் மயங்கி உள்ளார். பின்னர் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த நிக்கோமும் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி அறிந்ததும் வினேஷ் மனைவி நதியா மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் திரண்டனர்.

கணவரை தேவையின்றி அடித்து காயப்படுத்தியது ஏன்? என கேட்டு காவல் நிலையத்துக்கு வந்து கதறி அழுதார். அப்போது அங்கிருந்த தனிப்படை போலீசார் அவரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினிடம் நதியா புகார் அளித்தார். அவர் இது தொடர்பாக விசாரணை நடத்த கன்னியாகுமரி டி.எஸ்.பி.ஜெயச்சந்திரனுக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் காவல் நிலையத்துக்கு வந்து நடந்த சம்பவங்கள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களிடமும் டி.எஸ்.பி. விசாரித்துள்ளார்.

ஏட்டு ஆட்லின் அருள், வினேஷ் ஆகிய இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். வினேஷ் மனைவி தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் அளித்த புகாரில், தனது கணவர் வெளிநாட்டில் சில காலம் வேலை பார்த்து வந்தார். அப்போது ஏட்டு ஆட்லின் அருள் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார். பல சந்தர்ப்பங்களில் தனக்கு பாலியல் தொந்தரவு தந்தார். நான் அவரை எச்சரித்தேன்.

இதுதொடர்பாக என் மீதும், என் குடும்பத்தின் மீதும் ஆத்திரத்தில் இருந்தவர் இப்போது வேண்டுமென்றே எனது கணவர் மற்றும் சகோதரர் மீது பொய்யான புகார் கூறி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று மற்ற போலீசாருடன் சேர்ந்து சரமாரியாக தாக்கி உள்ளார். அதிர்ஷ்டவசமாக எனது கணவர் உயிர் தப்பினார். விஷயத்தை வெளியே கூறினால், எனது குழந்தைகளை கஞ்சா கேஸ் போட்டு விடுவேன் என மிரட்டுகிறார் என கூறி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு ஏட்டு ஆட்லின் அருள் மற்றும் அவருடன் சேர்ந்த மற்றொரு ஏட்டு சுபாஷ் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சுசீந்திரம் காவல் நிலையத்தில், காயம் அடைந்த வினேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸ் ஏட்டு ஆட்லின் அருள் மற்றும் ஏட்டு சுபாஷ் ஆகிய 2 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் வினேஷ் மற்றும் அவரது மைத்துனர் நிக்கோம் ஆகிய 2 பேரையும் அடித்து காயப்படுத்தி வினேஷ் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் செயினையும் எடுத்துக் கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல் ஏட்டு ஆட்லின் அருள் அளித்த புகாரின் பேரில் வினேஷ் மற்றும் அவரது மைத்துனர் நிக்கோம் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த காட்டுவிளை சந்திப்பில் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், இதை கண்டித்து வீட்டுக்கு செல்லுமாறு கூறிய போது வினேஷ், நிக்கோம் உள்பட 4 பேர் ஏட்டு ஆட்லின் அருள் வீட்டுக்கு வந்து அவரையும், அவரது மனைவியையும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: