*வனத்துறை நடவடிக்கை
நெல்லை : நெல்லை அடுத்த பேட்டை பகுதியில் அரிய வகை கழுகுகளை வேட்டையாடிய 2 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நெல்லை அருகே புதுப்பேட்டை பகுதியில் அரியவகை கழுகு இனங்கள் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு நேற்று தகவல் கிடைத்தது.
மேலும் சில கழுகுகள் வலையில் சிக்கி உயிருக்குப் போராடுவதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட வனத்துறை அதிகாரி இளங்கோ தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் நெல்லை வனச்சரக அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 2 கழுகுகள் வலையில் சிக்கி இறந்துக் கிடந்தது தெரியவந்தது. மேலும் 9 கழுகுகள் உயிருடன் வலையில் சிக்கித் தவிப்பதை கண்ட வனத்துறையினர் உடனடியாக 9 கழுகுகளையும் கவனமாக மீட்டதோடு வானில் சுதந்திரமாக பறக்க விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள காலனியில் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் 2 பேர் கழுகுகளைத் தாங்கள் வேட்டையாடியதாகக் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரத்தை அதிகாரிகள் அபராதமாக விதித்தனர்.
பின்னர் இதுகுறித்து நெல்லை மாவட்ட வனத்துறை அதிகாரி இளங்கோ கூறுகையில் ‘‘பேட்டை பகுதி மக்களுக்குப் பறவை இனங்களை வேட்டையாடக் கூடாது என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் தொடர்ந்து அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றார்.
துன்புறுத்தக்கூடாது
இதனிடையே விலங்கு நல அமைப்பினர் கூறுகையில் ‘‘பறவைகள், காட்டுவிலங்குகள் உள்ளிட்ட பிற உயிரினங்களை துன்புறுத்தக்கூடாது என்பது குறித்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அத்துடன் வன விலங்குகள் வேட்டையை தடுக்க பாளை புதுப்பேட்டை பகுதியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வனத்துறையினர் தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.
