புரசைவாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற போது 2 இளம் பெண்களை வழிமறித்து போதையில் பாலியல் சில்மிஷம்: 3 நேபாளிகளை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக உதைத்தனர்

 

சென்னை: புரசைவாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற 2 இளம் பெண்களை வழிமறித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 3 நேபாளிகளை பொதுமக்கள் பிடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அருகில் உள்ள மருந்தகத்திற்கு செல்ல உறவுக்கார இளம் பெண் ஒருவரை அழைத்து கொண்டு இன்று அதிகாலை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது குடிபோதையில் அவ்வழியாக வந்த 3 பேர் சாலையில் அதிகாலையில் தனியாக 2 பெண்கள் நடந்து செல்வதை பார்த்து, அவர்களிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.

ஆனால் 2 பெண்களும் அங்கிருந்து வேகமாக செல்ல முயன்றனர். அப்போது 3 பேர்களில் ஒருவர் இளம் பெண் ஒருவரை கையை பிடித்து இழுத்து தங்களுடன் வருகிறீர்களா….. உங்களுக்கு நாங்கள் பணம் தருகிறோம் என்று கூறியுள்ளனர். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த 2 பெண்களும் அவர்களிடம் இருந்து தப்பித்து சாலையில் சந்திப்பு அருகே நின்று இருந்த ஆட்டோ டிரைவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர். அதன்படி ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப்பட்ட 2 பெண்களை அழைத்து கொண்டு சம்பவம் நடந்த பகுதிக்கு வந்தனர். அப்போது 3 பேரும் போதையில் தள்ளாடியபடி இருந்ததை 2 பெண்களும் அடையாளம் காட்டினர்.

உடனே ஆட்டோ டிரைவர்கள் 3 பேரையும் சரமாரியாக உதைத்து கீழ்ப்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் போதையில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்திய போது, நேபாளம் நாட்டை சேர்ந்த ஜன்சன்(22) என்றும், அவரது உறவினர்களான 2 சிறுவர்கள் என தெரியவந்தது. இவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் இரவு பணி முடித்துவிட்டு இன்று அதிகாலை மது போதையில் தங்களது அறைக்கு செல்லும் போது, தனியாக சாலையில் சென்ற 2 பெண்களை கையை பிடித்து இழுத்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதைதொடர்ந்து போலீசார் 3 நேபாளிகள் மீதும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜன்சனை கைது செய்தனர். 2 சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் புரசைவாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: