நகை வாங்குவதை தவிர்க்குமாறு மோடி கூறியதால் ஆபரண தங்கம் விற்பனை 70 சதவீதம் வீழ்ச்சி: இறக்குமதி வரி 15% உயர்த்தியதால் நகைக்கடைகாரர்கள் தவிப்பு

 

கொல்கத்தா: இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கத்திற்கான தேவை 70 சதவீதம் வரை சரிந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் காலாண்டில் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களுக்கான தேவை கடந்த ஆண்டை விட 34 சதவீதம் அதிகரித்து 62.3 டன்னாக உயர்ந்திருந்தது. பொதுவாக இந்தியா ஆண்டுக்கு 800 முதல் 850 டன் வரை தங்கத்தை வாங்குகிறது. இதற்கு முன்பு வரை தங்கத்திற்கான இறக்குமதி வரி 6 சதவீதமாக மட்டுமே இருந்தது. அத்துடன் சரக்கு மற்றும் சேவை வரியையும் சேர்த்து ஒட்டுமொத்த வரிச் சுமை 9.18 சதவீதமாக இருந்தது.

இந்நிலையில், உள்நாட்டு ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால், தங்கத்திற்கான இறக்குமதி வரியை 15 சதவீதமாக உயர்த்தி கடந்த 13ம் தேதி முதல் ஒன்றிய அரசு புதிய உத்தரவை அமல்படுத்தியது. இந்த அதிரடி வரி உயர்வால் கடந்த 27ம் தேதியுடன் முடிந்த இரண்டு வார காலத்தில், இந்தியாவில் தங்கத்தின் தேவை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்த 25 டன்னில் இருந்து வெறும் 7.5 டன்னாகக் குறைந்துள்ளது. இது சுமார் 70 சதவீதம் வீழ்ச்சியாகும். ஈரான் போர் காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதும் நுகர்வோர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய தங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் தேசிய செயலர் சுரேந்திர மேத்தா கூறுகையில், ‘இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட பிறகு தங்கத்தின் தேவை 70 சதவீதம் சரிவடைந்துள்ளது. மொத்த வர்த்தகத்தில் 65 சதவீதம் பங்கைக் கொண்டுள்ள அமைப்புசாரா நகை வர்த்தகம் இந்த வரி உயர்த்தப்பட்ட நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். ஜோயாலுக்காஸ் நகைக்கடை குழுமத்தின் தலைவர் ஜோயாலுக்காஸ் கூறுகையில், ‘இறக்குமதி வரி உயர்வு மட்டுமல்லாமல், ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளும் வாடிக்கையாளர்களின் மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் கடைகளில் விற்பனை 35 சதவீதம் வரை சரிந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார். தற்போது ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து தங்கத்திற்கான ஒட்டுமொத்த வரி 18.45 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் தென்னிந்தியாவில் வாடிக்கையாளர்கள் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப குறைந்த எடை கொண்ட நகைகளை வாங்கத் தொடங்கியுள்ளனர். மேலும் பழைய தங்க நகைகளை விற்றுப் பணம் வாங்கும் போக்கும் அதிகரித்துள்ளது. உலக தங்கக் கவுன்சிலின் ஆராய்ச்சித் தலைவர் கவிதா சாக்கோ கூறுகையில், ‘சிறிய அளவிலான நகைக்கடைக்காரர்கள் தங்களது லாப வரம்பை தக்கவைக்க முடியாமல் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்’ என்று கூறினார்.

இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,040-க்கு விற்பனை
இன்றைய நிலையில் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,630க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,275க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: