குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகுகளுக்கு 60 நாள் மீன்பிடி தடைக்காலம்: நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது

 

குளச்சல்: மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்தியரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக் காலம் 2 பருவ காலமாக உள்ளது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதிவரை ஆகும். மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. விசைப்படகு ஆழ்கடல் பகுதிக்கு சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும். இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வர். இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் தடைக்காலம் ஜூன் 1ம் தேதி (நாளை மறுநாள்) நள்ளிரவு தொடங்குகிறது. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகினர் தங்கள் படகுகளை பழுது பார்ப்பது வழக்கம். மேலும் வலைகள், மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்து கொள்கின்றனர்.

இந்த மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகினர் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.பெரும்பான்மையான விசைப்படகுகள் கரை திரும்பி விட்டன.அவை மீன் பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. மீதி விசைப்படகுகள் நாளை மறுநாள் நள்ளிரவுக்குள் கரை திரும்பி விடும். ஆனால் பைபர் வள்ளம், கட்டுமரங்கள் குறைவான தூரம் சென்று மீன்பிடித்துவிட்டு உடனே கரை திரும்புவதால் வருடத்தின் அனைத்து நாட்களிலும் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறது. விசைப்படகு தடை நாள்களில் கட்டுமரங்களில் பிடித்து வரப்படும் மீன்களுக்கு பெரும் மவுசு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: