சென்னை: மூன்று மொழிக் கொள்கையை தமிழகத்தில் திணிக்கக் கூடாது என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 9ம் வகுப்பு மாணவர்களுக்கு குறுகிய காலத்திலேயே புதிய மொழியை கட்டாயப்படுத்துவது மாணவர்களின் கல்விச் சுமையையும், மன அழுத்தத்தையும் அதிகரிக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளின் மூலம் தமிழக மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தின் தனித்துவமான மொழிக் கொள்கையை புறக்கணித்து மூன்றாவது மொழியை திணிக்க முயற்சிப்பது மாநில உரிமைகளில் தலையிடுவதாகும்.
மொழி என்பது கற்றலின் கருவி மட்டுமல்ல; அது ஒரு இனத்தின் அடையாளமும், பண்பாட்டின் வெளிப்பாடும் ஆகும். அதனால் மொழிக் கொள்கை என்பது மக்களின் விருப்பத்தையும், மாநிலங்களின் தனித்துவத்தையும் மதித்து அமல்படுத்தப்பட வேண்டும். ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை நாடு முழுவதும் திணிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும்.
குறிப்பாக, தமிழக மாணவர்களுக்கு தேவையற்ற கல்விச் சுமையை ஏற்படுத்தும் வகையில் மூன்று மொழிக் கொள்கையை திணிப்பது மாணவர்களின் மனநலத்தையும் கல்வித் தரத்தையும் பாதிக்கும். புதிய மொழியை திடீரென கற்க வேண்டிய சூழல் உருவானால், அது கிராமப்புற மற்றும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும்.
எனவே, சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை மதித்து, மாநில மக்களின் உணர்வுகளையும் கல்வி உரிமையையும் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் மூன்றுமொழிக் கொள்கையை திணிக்கும் எந்த முயற்சியையும் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
