சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முகம்மது முபாரக் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பல தசாப்தங்களாகப் பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை உறுதி செய்து வரும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக் கொள்கை, தற்போது உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சட்டச் சவாலை எதிர்கொண்டிருப்பது பெரும் கவலையளிக்கிறது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த சமூக நீதி கட்டமைப்பையே அசைத்துப் பார்க்கும் நோக்கில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்குகளைத் தமிழக அரசு மிகத் தீவிரமாகக் கையாண்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை எவ்வித சமரசமுமின்றி பாதுகாக்க வேண்டும். நாட்டின் மிகச் சிறந்த, மூத்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு தமிழக அரசு தனது வாதங்களை மிக வலுவாக முன்வைக்க வேண்டும். இப்போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக நீதி அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒற்றைக் குரலில் மாநில அரசு தனது நிலைப்பாட்டை உணர்த்த வேண்டும்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை எதிர்கொள்வது குறித்து முதல்வர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. என்றாலும், வெறும் ஆலோசனைகளோடு நின்றுவிடாமல், களத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகத் தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட வேண்டும்.
இடஒதுக்கீட்டு வரம்பில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அது தமிழகத்தின் அமைதிக்கும், சமத்துவத்திற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும். எனவே, 69% இடஒதுக்கீட்டுக் கொள்கையைத் துளியும் வீரியம் குறையாமல் பாதுகாக்கத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளையும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
