மக்கள் தொகையில் மாற்றம் ஆராய உயர்மட்ட குழு அமைப்பு: அமித்ஷா அறிவிப்பு

 

புதுடெல்லி: சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற அசாதாரண காரணங்களால் நாடு முழுவதும் மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆராய உயர்மட்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: சட்டவிரோத ஊடுருவல் மற்றும் பிற காரணங்களால் மக்கள் தொகையில் இயல்பு மாறான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இது நாட்டின் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பெரும் சவாலாக அமைகிறது. இந்த சவாலை எதிர்கொள்ள, மக்கள் தொகை மாற்றங்கள் குறித்து ஆராய உயர்மட்ட குழு அமைக்கப்படும் என கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதன்படி ஒன்றிய அரசு தற்போது இக்குழுவை அமைத்துள்ளது.

இக்குழுவிற்கு ஓய்வுபெற்ற நீதிபதி நாவ்லேகர் தலைமை தாங்குவார். மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி துர்கா சங்கர் மிஸ்ரா, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி பாலாஜி வஸ்தவா மற்றும் டாக்டர் ஷமிகா ரவி ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெறுவார்கள்.

உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் இக்குழுவின் உறுப்பினர் செயலாளராக செயல்படுவார்.இக்குழு மதம் மற்றுமு் சமூகங்களின் அடிப்படையில் ஏற்படும் இயல்புக்கு மாறான மக்கள்தொகை மாற்றங்களின் போக்குகளை ஆய்வு செய்யும். பின்னர் இதற்கான தீர்வை பரிந்துரைக்கும். இவ்வாறு அமித்ஷா கூறி உள்ளார்.

Related Stories: