சிபிஎஸ்இ 9, 10ம் வகுப்புகளில் மும்மொழி கொள்கை அமல் நாடாளுமன்ற குழு விவாதம்: ஜூன் 2ம் தேதி நடக்கிறது

 

புதுடெல்லி: சிபிஎஸ்இ 9 மற்றும் 10ம் வகுப்புகளில் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட்டிருப்பது குறித்து நாடாளுமன்ற குழு ஆலோசனை நடத்த உள்ளது. ஒன்றிய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் வரும் ஜூன் 2ம் தேதி கூட இருப்பதாக மாநிலங்களவை செயலகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் , வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு மும்மொழி பாடத்திட்டம் அமலாக்கப்படுவது குறித்து விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுதவிர, சமீபத்திய சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு ஆன் ஸ்கிரீன் மார்கிங் எனப்படும் கணினி வழி டிஜிட்டல் மதிப்பீடு முறையான ஓஎஸ்எம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் நீட் வினாத்தாள் கசிந்ததால், நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21ம் தேதி மீண்டும் நடத்தப்பட இருக்கிறது. இதுதொடர்பாகவும் அதிகாரிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட உள்ளது. எனவே, ஒன்றிய கல்வி அமைச்சகம் மற்றும் சிபிஎஸ்இ அதிகாரிகள் ஆஜராக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதற்கிடையே, சிபிஎஸ்இ கட்டண அமைப்பை சீரமைப்பது குறித்து 4 பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகளுடன் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று ஆலோசனை நடத்தினார். சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியான பிறகு மறுமதிப்பீடு மற்றும் பிற செயல்முறைகளுக்காக மாணவர்கள் கட்டணம் செலுத்த முயன்ற போது பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் எழுந்த நிலையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: