கருப்புக்கொடி காண்பித்த காங்கிரசார் மீது தாக்குதல்: பினராயி விஜயனின் மெய்க்காப்பாளர் உள்பட 5 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

 

திருவனந்தபுரம்: கடந்த 2023ம் ஆண்டு பினராயி விஜயன் முதல்வராக இருந்தபோது ‘நவ கேரள சதஸ்’ என்ற பெயரில் அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சர்களுடன் பஸ்சில் சென்று பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு பினராயி விஜயன் செல்லும் இடங்களில் எல்லாம் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் மற்றும் இளைஞர் காங்கிரசார் கருப்புக்கொடி காண்பித்து போராட்டம் நடத்தினர்.

ஆலப்புழாவில் கருப்புக்கொடி காண்பித்த காங்கிரஸ் தொண்டர்கள் மீது பினராயி விஜயனின் மெய்காப்பாளர் அனில்குமார் மற்றும் பினராயி விஜயனின் பாதுகாப்புப் படையினர் 4 பேர் லத்தியால் சரமாரியாக தாக்கினர். இதில் அப்போதைய ஆலப்புழா மாவட்ட காங்கிரஸ் மாணவர் அமைப்பின் தலைவர் தாமஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அஜய் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் நீண்ட நாள் சிகிச்சைக்குப் பின்னரே உடல் நலம் தேறினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் முதலில் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

இதைத் தொடர்ந்து தங்களை தாக்கிய பினராயி விஜயனின் மெய்க்காப்பாளர் மற்றும் பாதுகாவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தாமஸ் மற்றும் அஜய் ஆகியோர் ஆலப்புழா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. ஆனால் அதன் பிறகும் போலீஸ் வழக்கு பதிவு செய்யவில்லை. இந்நிலையில் கேரளத்தில் ஆட்சி மாறியதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு முதல்வர் வி.டி. சதீசன் உத்தரவிட்டார்.

தொடர்ந்து பினராயி விஜயனின் மெய்காப்பாளர் அனில்குமார் மற்றும் பினராயி விஜயனின் பாதுகாப்புப் படையில் இருந்த காவலர்களான சந்தீப், அருண், விபின் மற்றும் ஷைஜு ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் 5 பேரையும் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து டிஜிபி ரவடா சந்திரசேகர் நேற்று உத்தரவிட்டார். அனில்குமார் கடந்த 25 வருடங்களாக பினராயி விஜயனின் மெய்க்காப்பாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: