புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டு இருந்த நீதிபதிகளை சட்டவிரோதமாக சிறைப்பிடித்த விவகாரம் தொடர்பாக 15 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல்களை சரிபார்க்கும் சிறப்பு தீவிரத் திருத்தப்பணியில் ஈடுபட்டு இருந்த நீதிபதிகளை சட்டவிரோதமாக சிறைப்பிடித்தது மற்றும் கடந்த மாதம் நடந்த சாலை மறியல் போராட்டங்கள் குறித்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்பேரில் தேசிய புலனாய்வு முகமை நேற்று முன்தினம் மால்டா மாவட்டத்தில் விரிவான சோதனையை நடத்தியது. இதில் இரண்டு தனித்தனி வழக்குகளில் சாலை மறியல்போராட்டங்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளை சட்டவிரோதமாக சிறைப்பிடித்ததில் ஈடுபட்டதாக மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு வழக்கில் பெண் நீதிபதியை சுமார் 8 மணி நேரம் சிறைப்பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் 12 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
