திமுக கூட்டணியில் இருந்து தவெக பக்கம் தாவியதால் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற்றப்படுகிறதா காங்கிரஸ்? மம்தா தலைமையில் திரள்கிறது எதிர்க்கட்சிகள்: அடுத்த மாதம் முதல் கூட்டம் நடத்த ஏற்பாடு

 

புதுடெல்லி: திமுக கூட்டணியில் இருந்து விட்டு தேர்தல் முடிந்த பிறகு தவெக பக்கம் தாவியதால் இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற்றப்பட்டு, அடுத்த மாதம் மம்தா தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அகில இந்திய அளவில் பா.ஜவை எதிர்க்க 2023ஆம் ஆண்டு இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைமையில் இதுவரை செயல்பட்டு வந்த இந்த அணியில் திமுக, சமாஜ்வாடி, திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் கட்சி, சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இணைந்து செயல்பட்டு வந்தன. கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி, டெல்லி தேர்தலுக்கு முன்பு வரை இந்தியா கூட்டணியில் இருந்தது. ஆனால் டெல்லி தேர்தலில் காங்கிரஸ்,ஆம்ஆத்மி தனித்தனியாக போட்டியிட்டதால், இந்தியா கூட்டணிக்கு பிரச்னை அடிப்படையில் ஆம்ஆத்மி ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி நிலைமை முற்றிலும் மாறி உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையில் ஒன்றிணைந்து போட்டியிட்ட காங்கிரஸ், தேர்தல் முடிவு வந்த மறுநாளே விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது. இதனால் திமுக மட்டுமல்லாமல் இந்தியா கூட்டணியில் உள்ள அகிலேஷ்யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும் கடும் விமர்சனம் செய்தது.

இன்னொரு பக்கம் மேற்குவங்க தேர்தலில் எஸ்ஐஆர் மூலம் தான் தோற்கடிக்கப்பட்டதாக நம்பும் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, ஒன்றிய அரசில் இருந்து பா.ஜவை வீழ்த்த இந்தியா கூட்டணி மீண்டும் பலப்பட வேண்டும். அதற்கு தான் முன்நின்று வழிநடத்தப்போவதாக அறிவித்து இருக்கிறார்.

ஜூன் முதல் வாரத்தில் இந்தியா கூட்டணியின் கூட்டத்தைக் கூட்டி, ஒத்த கருத்துடைய பிற கட்சிகளையும் அதில் அழைக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளிடையே இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதுகுறித்து காங்கிரஸ் ஊடகப் பிரிவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அதன் தலைவர் தெரிவித்தார்.

அதேபோல், சமாஜ்வாடி கட்சித் தலைவர்களும் இந்த கூட்டம் குறித்து தங்களுக்குத் தகவல் இல்லை என்றும், மம்தா பானர்ஜி நேரடியாக அகிலேஷ் யாதவைத் தொடர்பு கொண்டால் மட்டுமே அதுபற்றித் தெரியவரும் என்றும் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருந்து விட்டு தேர்தல் முடிந்த பிறகு தவெகவுடன் கைகோர்த்த கோபத்தில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சியிடமிருந்து தங்களுக்குத் தனித்தனி இருக்கைகளை ஒதுக்கக் கோரி திமுக கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் பட்சத்தில் திமுக அதில் நீடிப்பது கடினமான சூழலை ஏற்படுத்தக்கூடும்.

எனவே காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு, பாஜவை எதிர்க்கும் திரிணாமுல், திமுக, ஆம்ஆத்மி, பிஜூ ஜனதா தளம், சமாஜ்வாடி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணிக்கு புத்துயிர் ஊட்ட வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் ெடல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, அடுத்தாண்டில் (2027) உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெளியேற்றி விட்டு, காங்கிரஸ் இல்லாத இந்தியா கூட்டணி இணைந்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் மம்தா பானர்ஜியின் இந்த அழைப்பிற்கு காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் திமுக ஆகியவை எவ்விதம் பதிலளிக்கப்போகின்றன என்பதை பொறுத்து ஜூன் மாதம் இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

* மம்தா, ராகுல் உறவு எப்படி?

இந்தியா கூட்டணியில் இருந்த போதே மம்தாவுக்கும் ராகுலுக்கும் இடையிலான உறவு சீராக இல்லை. மேற்குவங்க தேர்தலிலும் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. மேலும் தேர்தல் பிரசாரத்தில் மம்தா ஆட்சியை ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் தேர்தல் தோல்விக்கு பிறகு மம்தாவை தொடர்பு கொண்டு ராகுல்காந்தி பேசினார். இந்தியா கூட்டணி மாநில அளவிலான அரசியலிலிருந்து தனித்து இயங்க வேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உதாரணமாக, கேரளாவில் இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிராகப் போட்டியிட்டாலும், அது அந்தக் குழுவின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகவே நீடிக்கிறது.

இந்தக் கொள்கை திரிணாமுல் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்தது. அதே போல் மேற்குவங்கத்தில் மம்தாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அகிலேஷ்யாதவ், உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் இணைந்து போட்டியிடும் என்று அறிவித்து உள்ளார். இதை எல்லாம் பார்க்கும் போது இந்தியா கூட்டணியை பொறுத்தவரை, ஒருவித குழப்ப நிலையே தொடர்ந்து நிலவி வருகிறது.

* மம்தா தலைமை வகித்தால் இடதுசாரிகள் நிலை என்ன?

இந்தியா கூட்டணியில் காங்கிரசை வெளியேற்றி விட்டு மம்தா தலைமை வகித்தால் இடதுசாரிகள் நிலைமை என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேற்குவங்கத்தில் அவர்கள் மம்தாவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறார்கள். அதே சமயம் கேரளாவில் காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்யும் இடதுசாரிகள் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தலைமையை ஏற்றது போல், மம்தா தலைமையையும் ஏற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதை எல்லாம் தவிர்க்க காங்கிரசை வெளியேற்றி விட்டால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்கலாம் என்ற கருத்தும் டெல்லி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

* காங்கிரசின் அணுகுமுறை உகந்ததாக இல்லை: மார்க்சிஸ்ட் கண்டனம்

5 மாநில தேர்தல் குறித்து டெல்லியில் மே 22 முதல் 24 வரை நடைபெற்ற மார்க்சிஸ்ட் மத்தியக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி கூறுகையில்,’ 5 மாநில தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது பாஜ-ஆர்எஸ்எஸ் கூட்டணியை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். ஆனால் மாநில கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மீதான காங்கிரசின் அணுகுமுறை அத்தகைய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு உகந்ததாக இல்லை. கேரள தேர்தல் பிரச்சாரத்தின் போது, மார்க்சிஸ்ட் கட்சிக்கும் பாஜவுக்கும் இடையே ஒரு உடன்பாடு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு பல தீய நோக்கமுள்ள, ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஆகும்.

இந்தியா கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு கட்சிக்கு எதிராகத் தொடுக்கப்பட்டவை. தேர்தல் போரின் குறுகிய, உடனடித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பல சமயங்களில் காங்கிரஸ் இந்தக் குறிப்பிட்ட விஷயத்தைத் தவறவிடுகிறது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளும் திரிணாமுல் காங்கிரசும் ஒன்று சேரும் சாத்தியம் இல்லை. தி.மு.கவின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, எங்கள் கூட்டணி பரிசீலனைக்கு வருவதற்கான கேள்விக்கே இடமில்லை’ என்றார்.

Related Stories: