ஐஸ்வர்யா ராய் குண்டாக இருப்பதாக விமர்சனம்; வயதான பெண்களை பார்க்க பழகிக் கொள்ளுங்கள்: உருவ கேலிக்கு பாஜக நடிகை கங்கனா கண்டனம்

மும்பை: கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய் பச்சனை உருவ கேலி செய்தவர்களுக்கு நடிகை கங்கனா ரனாவத் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரான்சில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில், உலக அழகி மற்றும் பாலிவுட் நட்சத்திரமான ஐஸ்வர்யா ராய் பச்சன் (52), லோரியல் பாரிஸ் நிறுவனத்தின் தூதுவராக பங்கேற்றார். அவர் டிசைனர் அமித் அகர்வால் வடிவமைத்த நீல நிற கவுன் உட்பட பல்வேறு உடைகளில் ரெட் கார்பெட்டில் தோன்றினார்.

அவரது தோற்றம் குறித்து ரசிகர்கள் பலரும் பாராட்டிய நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் அவரது உடல் எடை (குண்டாக இருத்தல்) மற்றும் வயது குறித்து எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டனர். இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத், ஐஸ்வர்யா ராய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ரெட் கார்பெட்களில் வயதான பெண்களைப் பார்ப்பதற்கு மக்கள் பழகிக்கொள்ள வேண்டும். பேஷன் மற்றும் ஸ்டைல் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். பெண்கள் சமூகத்திற்கு எந்தவிதமான பரிபூரணத்தையோ அல்லது கற்பனையான அழகு எதிர்பார்ப்புகளையோ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பலரும் கங்கனாவின் இந்த கருத்தை வரவேற்றுள்ளனர். ஆண் நடிகர்களை விட, நடிகைகள் வயது மற்றும் உடல் அமைப்பு குறித்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்வதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து சர்வதேச அரங்குகளில் இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: