கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சேஷ ராஜபுரம் கிராமத்தில் சீரான மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அஞ்செட்டி தாலுகா நட்டராபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சேஷ ராஜபுரம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான குடிநீர் தட்டுப்படு மற்றும் மின்சார தடையும் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேஷ ராஜபுரத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்ற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்த பிரச்சனை குறித்து ஊராட்சி நிர்வாகிகளிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை புகாரளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் காரணமாக அஞ்செட்டி, ஒகேனக்கல் செல்லக்கூடிய வாகனங்கள் சுமார் 1 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் களைந்து சென்றனர்.
