கோவை, மே 25: கோவை காந்திபுரத்தில் உள்ள டவுன் பஸ் ஸ்டாண்ட் கடந்த 29-03-1960 ஆண்டு கோவை நகராட்சியாக இருந்த காலத்தில் அமைக்கப்பட்டது. அப்போதைய தமிழக கவர்னரின் ஆலோசகர் லட்சுமி நாராயணன், கோவை மாவட்ட கலெக்டர் ஆக இருந்த சிவப்பிரகாசம் ஆகியோர் இந்த பஸ் ஸ்டாண்ட்டை துவக்கி வைத்தனர். இது தான் கோவையின் பிரதானமான பஸ் ஸ்டாண்டாக இருந்தது. இதற்கு பிறகு தான் கோவை நகரில் இதர இடங்களில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது.
இந்த வளாகத்தில் தற்போது அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் பாதுகாப்பு இல்லாத கட்டிடத்தில் இருக்கிறது. பஸ் ஸ்டாண்ட்டில் பயணிகள் உட்காருவதற்கு போதுமான நாற்காலிகள் அமைக்கப்படவில்லை. குடிநீர் குழாய்கள் இருக்கிறது. வாட்டர் பில்டர் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எதிலும் குடிநீர் வருவதில்லை. பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் தரைதளம் பெயர்ந்து மேடு பள்ளமாக இருக்கிறது. பஸ்கள் திரும்புவதற்கு போதுமான இட வசதி செய்யப்படவில்லை. ஒரே நேரத்தில் அதிக பஸ்கள் நிறுத்தப்படுவதால் எப்போதும் இங்கே போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
