தொடரும் மின்வெட்டு பிரச்னை; சென்னை உள்பட 4 மாவட்டம் இருளில் மூழ்குகிறது: இரவில் வெடித்த மக்கள் போராட்டம்

 

* மின்வாரிய அலுவலகங்கள் முற்றுகை
* அலட்சியமாக பதில் கூறும் மின்சாரத்துறை அமைச்சர், அதிகாரிகள்

சென்னை: தலைநகரான சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பல மணி நேரம் மின்வெட்டு உருவாகியுள்ளது. இதனால், ஆங்காங்கே மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பிரச்னையை தீர்க்காத மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கோடைக்கால வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அறிவிக்கப்படாத இந்த மின்தடை பொதுமக்களை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியாத நிலை நீடிப்பதால், மறுநாள் வேலைக்குச் செல்வோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது ஒருபுறமிருக்க, சிறு குறு தொழில்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கணினி சார்ந்த அலுவலகங்கள் மின்சாரமின்றி முடங்கியுள்ளதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. கோடைக் காலத்தில் மின்சாரத் தேவை வழக்கத்தை விட அதிகரிக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தும், முதல்வர் விஜய் தலைமையிலான அரசும் – மின்வாரியமும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மின்தடை குறித்துப் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றால், முறையான பதில்கள் அதிகாரிகளிடம் இருந்து கிடைப்பதில்லை என்றும், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதேபோல், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தொலைபேசி மையமான மின்னகத்தில் புகார் அளித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். அதிகாரிகள் இப்படி இருக்க மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மின்வெட்டுக்கு காரணம் பராமரிப்பு பணி தான் என சிம்பிளாக பதில் கூறிவிட்டு கிளம்பிவிடுகிறார். சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மின்வெட்டு காரணமாக இருள் சூழ்ந்தன.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொலை மற்றும் கொள்ளை கூட நிகழும் என அச்சத்தில் இருந்துவருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரு ஆளும் கட்சி எம்எல்ஏவே அரசை எதிர்த்து போராட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.

* மக்கள் மறியலால் ஸ்தம்பித்த கொளத்தூர்
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாதாகுப்பம் பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் பாபா நகர் மூன்றாவது மெயின் ரோட்டில் உள்ள மின்வாரிய துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் கொளத்தூரில் கடுமையான மின்தடை ஏற்பட்டது. கொளத்தூர் ராஜமங்கலம் காவல்நிலையத்துக்கு உட்பட்ட 200 அடி சாலையில் புழல் கடப்பா பகுதி மற்றும் ரேவதி நகர் பகுதியில் இரவு எட்டு மணி முதல் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படாததால் நள்ளிரவு 2 மணிக்கு அப்பகுதி மக்கள் செந்தில்நகர் போலீஸ் பூத் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ராஜமங்கலம் போலீசார் வந்து பொதுமக்களை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்கள் வந்து பிரச்னையை சரி செய்தால் மட்டுமே இங்கிருந்து செல்வோம் என்று கூறினர்.

இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைத்து அவசர அவசரமாக மின் பிரச்னை சரிசெய்யப்பட்டு நள்ளிரவு 2.30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.‘‘தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து நிம்மதியாக தூங்க முடிவதில்லை. தினமும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது மின்தடை ஏற்படுகிறது. இதனால் மறியல் செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டது’’ என்று மக்கள் தெரிவித்தனர். திருவொற்றியூரில் மின்வாரிய ஆபீஸ் முற்றுகை: திருவொற்றியூர் விம்கோ நகர், பாரத் நகர், பாரதியார் நகர், அம்பேத்கர் நகர், ரங்கம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதலே பகல் வேளைகளில் மின்வெட்டு ஏற்பட்டது. நேற்று இரவு சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மின் துண்டிப்பு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே உள்ள மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால் மின்வாரிய ஊழியர்கள் முறையான பதில் அளிக்காததால் சாலை மறியல் ஈடுபட்டனர். பவர் கட்டால் பரிதவித்த தண்டையார்ப்பேட்டை மக்கள்: ஏழுகிணறு போர்ச்சுக்கல் தெருவில் நேற்றுமுன்தினம் இரவு மின்சாரம் தடைபட்டது. அதை தொடர்ந்து மக்கள் மின்சாரம் வரவில்லை என்று மின்வாரிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்தனர் அதை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் அதனை சரி செய்தனர். இதேபோல் ராயபுரம், காசிமேடு, வண்ணாரப்பேட்டை, ஆர்கே நகர், புது வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மின்சாரம் இரவு நேரங்களில் தடை ஏற்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்புக்கு பிறகு மின்சாரம் ஒரு சில பகுதிகளில் உடனடியாக வழங்கப்பட்டது.

திருத்தணி: ஆர்கே.பேட்டை ஒன்றியத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் கிராம மக்கள் சிறுவர்கள் முதியோர் துக்கம் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டனர். திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல கிராமங்களில் மின்தடையால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர். பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பொதட்டூர்பேட்டை பள்ளிப்பட்டு அத்திமாஞ்சேரிபேட்டை, சொரக்காய் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு நெசவுத்தொழில் முடங்கி இரவு முழுவதும் பொதுமக்கள் துக்கமின்றி அவதி அடைந்தனர். திருவாலங்காடு ஒன்றியத்தில் நெடுமரம் கிராமத்தில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் நேற்று முன் தினம் மாலை முதல் மின்தடை ஏற்பட்டுள்ளதால் குடிநீர் உள்ள அத்தியாவசிய சேவைகளுக்காக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சூறைக்காற்றால் திருத்தணி பகுதியில் மின்தடை ஏற்பட்டதை தொடர்ந்து திருத்தணி ஒன்றியம், திருவலாங்காடு ஒன்றிய கிராமங்களில் 20 மணி நேரம் கடந்தும் மின் விநியோகம் தொடங்காததால் மக்கள் கடும் பாதிப்படைந்ததுள்ளனர்.

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் மின் பகிர்மான மையத்தின் கீழ் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை திடீரென ஏற்பட்ட மின்வெட்டால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நீண்ட நேரம் மின் விநியோகம் செய்யப்படாததால் நூற்றுக்கணக்கான மக்கள் அந்தந்த பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, பின்னர் வாலாஜாபாத்- தாம்பரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, மின்வெட்டுக்கான சரியான காரணம் கூட தெரிவிக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர். முறையாக மின் பராமரிப்பு பணிகளை செய்து இருந்தால் இதுபோன்ற பேரிடர் காலங்களில் அறிவிக்கப்படாத நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்படாது என தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த வாலாஜாபாத் போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர்.

பொன்னேரி : வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு அதிகரித்துள்ளது. இந்த பகுதியில் தினமும் 10 முறைக்குமேல் மின்தடை செய்யப்படுகிறது. இதனால் பெரிதும் அந்த பகுதி மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். மின்வெட்டுக்கு திமுக, விடுதலைச்சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதால் குளிர்சாதன பெட்டிகள், வாஷிங் மெஷின் செயல்படாமல் பழுதாகிவிடுகின்றன.

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி முழுவதும் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் மின்சாரம் பல மணி நேரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில், நேற்றும் திடீரென இரவு நேரத்தில் பல மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் கடம்பத்தூர் மேம்பாலம் அருகே திருவள்ளூர் – சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதியில் இரவு நேரங்களில் மின்தடை நீடிப்பதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சிரமப்பட்டு வருகின்றனர். நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறைந்த மின்னழுத்தம் காரணமாக மோட்டார் பம்புகள் இயங்காததால் குடிநீர் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. .
மதுரவாயல்: மதுரவாயலில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மதுரவாயல் எம்.எம்.டி.ஏ.காலனி நான்கு மற்றும் ஐந்தாவது பிளாக், அபிராமி நகர், கந்தசாமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு 9.30 மணிக்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டதால் 2000 மேற்பட்ட மின் நுகர்வோர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இது தொடர்பாக புகார் அளிக்க மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்த போதும் அழைப்பை ஏற்கவில்லை. மின் வெட்டால் அவதியுற்று ஆத்திரமடைந்த நிலையில் திரண்டு வந்த பொதுமக்கள் மதுரவாயல் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பணியில் இருந்த அதிகாரி ஒருவரை கேட்டபோது பல்வேறு பகுதியில் பழுதாகி மின்வெட்டு ஏற்படுவதாக கூறினார். அழைப்பை ஏன் ஏற்பதில்லை, சென்னை அருகே மிகப்பெரிய பகுதியில் இரண்டு ஊழியர்களை வைத்து என்ன செய்ய முடியும் என பொதுமக்களின் கேள்விக்கு அதற்கு முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என அதிகாரி அலட்சியமாக பதில் கூறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தேர்தலின் போது மட்டும் எப்படி மின்வெட்டு இல்லாமல் விநியோகம் செய்ய முடிந்தது. செல்போனில் தொடர்பு கொண்டால் அழைப்பை ஏற்று அப்போது உடனடியாக புகாரை நிவர்த்தி செய்தீர்கள் என கடும் வாக்குவாதம் செய்தனர். புழல்: புழல் அருகே புத்தாகரம், லட்சுமிபுரம், இந்திரா நகர், சாரதி நகர், திருவள்ளூர் சாலை, பாரதியார் தெரு உள்பட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் 7 மணி நேரம் தொடர் மின்வெட்டு காரணமாக ஏராளமான முதியவர்கள், குழந்தைகள் உள்பட பல்வேறு தரப்பினர் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவிக்க தொடர்பு கொண்டபோதும் ஊழியர்கள் போனை எடுக்கவில்லை. எனவே, புழல் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று முன்தினம் இரவு கடப்பா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அறிவிக்கப்படாத தொடர் 7 மணி நேர மின்வெட்டை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதவரம்: மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளான செங்குன்றம், புழல் ஒன்றியம், சோழவரம் ஒன்றியம், பாடியநல்லூர், தீர்த்தக்கரையாம்பட்டு, விளாங்காடுபாக்கம், கிராண்ட்லைன், வடகரை, அழிஞ்சிவாக்கம், நல்லூர், சோழவரம், புழல், காவாங்கரை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மின்தடை காரணமாக அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் 15வது மண்டலம் 193வது வார்டுக்கு துரைப்பாக்கம் போஸ்ட் ஆபீஸ் தெரு,வேம்புலி அம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, தேரடி தெரு ஆகிய பகுதிகளில் சில தினங்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பெருங்குடி, சீவரம் பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து நள்ளிரவு ஒரு மணி அளவில் மின்விநியோகம் செய்யப்பட்டது. மேலும், கொடுங்கையூர், ராயபுரம், எழும்பூர், துறைமுகம், வில்லிவாக்கம், புழுதிவாக்கம், திருவான்மியூர், முட்டுக்காடு, பட்டாபிராம், வேளச்சேரி, ஆலந்தூர், மடிப்பாக்கம், நந்தம்பாக்கம், செம்மஞ்சேரி, பம்மல், மூவரசன்பேட்டை, ராஜகீழ்பாக்கம், கடம்பத்தூர், வெண்மணம்புதூர், ஊத்துக்காடு, அவலூர் போன்ற இடங்களில் தொடர் மின்வெட்டு பிரச்னை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆலந்தூர்: ஆலந்தூர், நங்கநல்லூர், முகலிவாக்கம் போன்ற பகுதிகளில் பகல், இரவு என தொடர்ந்து மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
ஆலந்தூர் ஏகாம்பர டபேதார் தெரு, தர்மராஜா கோயில் தெரு, சவுரி தெரு, அப்பாவு தெரு, மு முக்தம்ஜி தெரு, ஜிலானி தெரு, இப்ராகிம் தெரு, காஜி தெரு, ஆசர் கானா தெரு, லஸ்கர் தெரு போன்ற பகுதிகளில் தொடர்ந்து 5, 6 முறை மின்வெட்டு ஏற்பட்டது. இதுகுறித்து புகார் அளிக்க மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டால் யாரும் போனை எடுத்து பேசுவதில்லை. அந்த வார்டு திமுக பெண் கவுன்சிலர் பிருந்தா ஸ்ரீ முரளி கிருஷ்ணர் நேரடியாக மின்சார அலுவலகம் சென்று அதிகாரியை சந்தித்து அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதை தவிர்க்க உடனடியாக புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்குமாறு மனு அளித்தார்.

அதேபோல் நங்கநல்லூர் லட்சுமி நகர் 4 ஸ்டேஜ் மற்றும் வோல்டாஸ் காலனி 5வது தெரு போன்ற பகுதிகளில் 3 முறை மின்சாரம் தடைபட்டது. நங்கநல்லூர் தெற்கு பக்தவச்சல நகர், 3வது குறுக்கு தெரு பகுதியில் நேற்றும் இன்றும் காலையில் ஒரு மணி நேரம் மின்சார தடைபட்டது. மேலும் பகுதிகளிலும் மின்சாரம் தடைபட்டது. இப்பகுதிகளை சேர்ந்த நலச்சங்க நிர்வாகிகள் கவுன்சிலர்கள் துர்காதேவி நடராஜன், செல்வேந்திரன் ஆகியோரை தொடர்புகொண்டு மின் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மின்தடையை சரிசெய்ய உதவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

ஆவடி, அம்பத்தூர்: பட்டாபிராம் மேற்கு கோபாலபுரம், வ.உ.சி., தெருவில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டது. இதனால், வ.உ.சி., 6 மற்றும் 7வது தெருக்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் வெட்டு ஏற்பட்டது. சுமார் 17 மணி நேரம் மின் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கோபாலபுரம் பகுதியை பொறுத்தவரை தினமும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதேபோல் அம்பத்தூர், கள்ளிக்குப்பம், மூகாம்பிகை நகர், காந்தி நகர், முத்தமிழ் நகர் கிழக்கு, பாலாஜி நகர், கங்கை நகர் போன்ற பகுதிகளில் இரவு 11 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் புழுக்கத்தில் தூக்கமின்றி தவித்தனர். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், ஆவடி, அம்பத்தூர், கள்ளிக்குப்பம், மூகாம்பிகை நகர், காந்தி நகர், முத்தமிழ் நகர் கிழக்கு, பாலாஜி நகர், கங்கை நகர், பட்டாபிராம், அணைக்கட்டு சேரி, சோராஞ்சேரி, அமுதூர் மேடு, ஜெ.ஜெ., நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அடிக்கடி, மின்வெட்டு ஏற்படுவதால் வீட்டு உபயோக பொருட்கள் பழுதாவதாக புகார் தெரிவிக்கின்றனர். எனவே, அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு பிரச்னைக்கு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முதியவர்கள், கர்ப்பிணிகள் மாடியில் தவிப்பு
வாலாஜாபாத் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் நீண்ட நேர அறிவிக்கப்படாத மின்வெட்டால் ஒரு சில வீடுகளில் பயன்படுத்தப்படும் இன்வெர்ட்டர்களும் பயன்பாடு இன்றி போனதால் வீட்டில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் கடும் சிரமப்பட்டனர். வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்படாத மின்வெட்டால் வீட்டின் மாடியில் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் கொசுக்கடியால் நள்ளிரவு வரை தூக்கமின்றி தவித்தனர். இதனால் நேற்று பெரும்பாலானோர் வேலைக்கு செல்லாமல் விடுப்பு எடுத்தனர்.

சராசரியாக நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதன பொருட்களான ஏசி, பிரிட்ஜ், பேன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. மின்விநியோகம் சரிவர இல்லாததால் மின்னழுத்த குறைபாடுகள், மின்வெட்டு ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பு ஏற்று உள்ள நிலையில் மாவட்டம் தோறும் உள்ள மின்வாரிய பகிர்மானங்களுக்கு உரிய மின்விநியோகம் செய்யப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

முதல்வர் தொகுதியில் 2 நாளாக மின்வெட்டு
பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மகாகவி பாரதிநகர், சாஸ்திரி நகர், சர்மா நகர், புது நகர், காந்தி நகர், எருக்கஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய ஊழியர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். ஆனால், மின்வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மேற்கண்ட இடங்களில் மீண்டும் மின்தடை ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்து சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சர்மா நகர் – எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்கேபி நகர் போலீசார் மற்றும் மின்சாரத்துறை ஏடி சித்ரா உள்ளிட்டோர் பொதுமக்களிடம் சமாதானம் பேசினர். அரை மணி நேரத்தில் மின்சாரம் சீர் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Related Stories: