முதல்வர் எங்க இருக்காரு? முதல்வரை சந்திக்காமல் செல்ல மாட்டேன்: கோட்டைக்கு குழந்தையுடன் வந்து பரபரப்பு ஏற்படுத்திய பெண்

 

சென்னை: சென்னை சார்லஸ் நகரைச் சேர்ந்த கிரிஸ்டல் என்ற பெண் தனது குழந்தையுடன் தலைமை செயலகத்திற்கு வந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம், தனது கணவரை புதுக்கோட்டை போலீசார் காரணமின்றி அழைத்து சென்றதாக கூறி, முதல்வரை நேரில் சந்தித்து புகார் அளிக்க விரும்புவதாக தெரிவித்தார். அவரை உள்ளே செல்ல அனுமதிக்காததால் கிரிஸ்டல் ஆவேசமடைந்தார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் தலைமை செயலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய கிரிஸ்டல், ‘என் கணவரை யார் என்று கூட தெரியாத சிலர் புதுக்கோட்டை போலீசார் என கூறி வீட்டிலிருந்து இழுத்துச் சென்றனர். அவர் என்ன தவறு செய்தார், எதற்காக அழைத்து சென்றார்கள் என்ற எந்த தகவலும் சொல்லவில்லை. நான் கேட்டபோது என்னை தள்ளி இழுத்து தாக்கினர். என் ஆடைகளும் கிழிந்தன. மேலும், நான் சிஎம் செல் மூலம் புகார் அளிக்கவும், முதல்வரை சந்திக்கவும் வந்தேன். ஆனால் காவல்துறையினர் என்னை அனுமதிக்காமல் தள்ளி இழுத்தனர். உடலிலும் காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். என் குழந்தை முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்தது.

இதற்குதான் போலீசாருக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறதா? நடுவீட்டில் என் குழந்தை முன்பு என்னுடைய கணவரை இழுத்து சென்றுள்ளனர். காவல் துறையினர் எந்த விதிகளையும் கடைபிடிக்காமல் அவர்கள் இஷ்டத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்கின்றனர். இதையெல்லாம் நான் முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் என்னை காவலர்கள் பார்க்க அனுமதி மறுக்கின்றனர் என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

Related Stories: