சென்னை: ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்படும் ‘சகுரா சயின்ஸ் உயர்நிலைப் பள்ளி பரிமாற்றத் திட்டம்-2026’ என்ற சர்வதேச கல்வி மற்றும் அறிவியல் பரிமாற்றத் திட்டத்தில் பங்கேற்க தமிழ்நாட்டை சேர்ந்த 4 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜப்பான் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு, அந்நாட்டின் மேம்பட்ட அறிவியல், தொழில்நுட்பம், கல்வி முறை மற்றும் கலாச்சார அனுபவங்களை நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் சிறப்பாக பங்கேற்று வெற்றி ெபற்ற அரசு மாதிரிப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களில் தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை, ரோகித்குமரன், நீலகிரி மாவட்டம் கூடலூர் அர்னால்ட் ஜாக் ஆலிவர், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் லக்ஷிதா, ஈரோடு மாவட்டம் கணபதி பாளையம் கனிஷ்கா, ராமநாதபுரம் எமனேஸ்வரம் பள்ளி மாணவி மாலை ஈஸ்வரி ஆகியோர் ஜப்பான் செல்ல தேர்வாகியுள்ளனர். இந்த திட்டம் மே 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. இந்திய அளவில் மொத்தம் 56 மாணவ, மாணவியரில் தமிழ்நாட்டில் 4 பேர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
