புதுச்சேரி, மே 20: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் சட்டவிரோதமாக ஓட்டு போட்ட பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தாய், மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் சிலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து புதுச்சேரி மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தல்களில் சட்டவிரோதமாக வாக்களித்து இருப்பதாக புகார் வந்தது. அவர்கள் வெளிநாடுகளுக்கு திரும்பிச் செல்லும்போது கண்காணித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்பேரில், தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளுக்கு திரும்பிச் செல்லும் வெளிநாடு வாழ் இந்தியர்களை குடியுரிமை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அதன்பேரில், சென்னை விமான நிலையத்தில் கை விரலில் மை இருந்தவர்களிடம் விசாரித்தபோது, வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் என்பதும், அவர்கள் புதுச்சேரி, தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போட்டு இருப்பதும் தெரியவந்தது. அதேபோல், கடந்த 14ம் தேதி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடியுரிமை பணியகத்தின் உதவி அயலக மண்டல பதிவு அதிகாரி சாஜி பயணிகளை சோதனை செய்தார். அப்போது, புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மவுனியம்மாள் (70), அவரது மகள் ரீனா நந்தினி (45) என்பதும், அவர்கள் கைகளில் மை இருந்ததும் ெதரியவந்தது. விசாரணையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காலாப்பட்டு தொகுதிக்கு இசிஆர் கேபிஎஸ் சென்டர் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டது தெரியவந்தது.
பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களாக இருந்தும், சட்டவிரோதமாக புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து உள்ளனர். மேலும், புதுச்சேரி கருவடிக்குப்பம் இடையன்சாவடி ரோட்டில் வசிக்கும் அவர்கள், தவறான உறுதிமொழி அளித்து வாக்காளர் பட்டியலில் சேர்த்து, தங்களது பழைய இந்திய வாக்காளர் புகைப்பட அட்டையை பயன்படுத்தி ஓட்டு போட்டுள்ளனர். சென்னையில் இருந்து ஓமன் வழியாக பிரான்ஸ் செல்ல இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து, அதிகாரி சாஜி, புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஷாமளா தலைமையிலான போலீசார், சென்னைக்கு சென்று, உரிய ஒப்புதல் பெற்ற பிறகு, குற்றம் சாட்டப்பட்ட நபர்களை லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், ஜேஎம்-1 நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 பிரிவு 31ன் கீழ், மேற்கண்ட 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
