கண்டமங்கலம் அருகே பைக் மீது கல்லூரி பேருந்து மோதி டாக்டர் பரிதாப பலி

 

 

கண்டமங்கலம், மே 15: புதுச்சேரி முத்திரையர்பாளையம் இளங்கோவடிகள் தெருவை சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மகன் கோகுல்(25). டாக்டரான இவர், புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் வேலை முடிந்து, தனது பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே எம்.என்.குப்பம் பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து பைக் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட கோகுலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு, அரியூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோகுல் தந்தை செல்வநாயகம், கண்டமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: