பஞ்சப்பள்ளி: பாலக்கோடு அருகே உள்ள சின்னாறு அணை போதிய மழையின்மையால் வறண்டு குட்டை போல காட்சியளிப்பதால், அந்த அணையை நம்பி இருக்கும் விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணை, கடந்த 2 ஆண்டுகளாகவே போதிய மழையில்லாத காரணத்தால் தண்ணீரின்றி வறண்டு குட்டை போலவே காட்சியளிக்கிறது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் பாலக்கோடு, மாரண்டஹள்ளி பேரூராட்சிகள் மற்றும் தருமபுரி நகராட்சிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சின்னாறு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும், விவசாய நிலங்கள் வறண்டு போகும் சூழலும் நிலவுகிறது. காடுகள் நிறைந்த பகுதிகளில் உற்பத்தியாகும் மழைநீரை நம்பியே இந்த அணை உள்ளது. இப்பகுதி விவசாயிகள் சுமார் 2,000 முதல் 4,500 ஏக்கர் வரையிலான விளைநிலங்களுக்கான பாசன வசதி பெறுகின்றனர். மேலும் இந்த அணையின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 13 முக்கியக் கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. எனவே பருவ மழை பெய்தால் மட்டுமே சின்னாறு அணைக்கு நீர்வரத்து கிடைக்கும் என்பதால், அப்பகுதி விவசாயிகள் மழையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
