பெரிதினும் பெரிதாக விளங்கும் அம்பிகை

226. மஹா தந்த்ரா, 227. மஹா மந்த்ரா, 228. மஹாயந்த்ரா, 229. மஹாஸநா, 230. மஹா யாக க்ரமாராத்யா, 231. மஹா பைரவ பூஜிதா.
நாம் இரண்டு நாமங்களுக்கு முன்னாலேயே சர்வ யந்த்ராத்மிகா, சர்வ மந்த்ர சொரூபிணீ, சர்வ யந்த்ராத்மிகா, சர்வ தந்த்ர ரூபா, மனோன்மநீ என்று பார்த்தோம். இதில் அம்பாள் எப்படி மந்த்ர சொரூபிணீயாக இருக்கிறாள். எப்படி தந்த்ர ரூபமாக இருக்கிறாள் என்றெல்லாம் விளக்கமாக பார்த்தோம்.
ஆனால், இந்தப் பகுதியில் வசின்யாதி வாக் தேவதைகள் எல்லாவற்றையுமே மஹா… மஹா… என்று வர்ணித்துக் கொண்டே வருகிறார்கள். பெரிது, பெரிது என்று வர்ணித்துக் கொண்டே வருகிறார்கள். அதற்கான காரணத்தையும் பார்த்தோம். ஏனெனில், இதற்கு முன்னால் நிர்குணத்தை ஒன்றுமே இல்லை… இல்லை… என்று சொன்னோம். ஆனால், இங்கோ இல்லை… இல்லை… என்பது மட்டுமல்ல. இருக்கிறது… இருக்கிறது… என்பதிலும் அம்பாள்தான் இருக்கிறாள்.
எதையெல்லாம் நாம் இல்லை… இல்லை … என்று சொல்கிறோமோ. அதுவும் அம்பாள்தான். எதெல்லாம் உண்டு… உண்டு… என்று சொல்கிறோமோ அதுவும் அம்பாள்தான். முதலில் நிர்குணமாக இல்லை… இல்லை… என்று சொன்னதுபோன்று தெரிந்தது. அதற்குப் பிறகு வாக்தேவதைகள் உண்டு… உண்டு… என்று இதைவிடப் பெரியது. இதைவிடப் பெரியது மஹா… மஹா… என்று வர்ணிக்கத் தொடங்கி விட்டன. இது தைத்திரிய உபநிஷதத்தில் வரக்கூடிய மஹதோ மஹீயான்… என்கிற வாக்கியத்தின் வெளிப்பாடாக வருவதாகும். அம்பாள் பெரிதுக்கும் பெரிதாக…. இருக்கிறாள் என்று காண்பிக்கிறார்கள்.
அப்படிப்பட்ட அம்பாளை நாம் எப்படி தரிசிப்பது. என்ன வழி என்பதுபோன்று ஒரு வரைபடம் போன்று காண்பிக்கிறார்கள். அதுவே கீழே வரும் நாமங்களின் பொருளாகும்.
மஹா தந்த்ரா, மஹா மந்த்ரா, மஹாயந்த்ரா போன்ற நாமங்களாகும்.
இதில் முதல் நாமாவான மஹா தந்த்ரா என்பதை பார்ப்போம். எதெல்லாம் நமக்கு அந்த பரவஸ்துவான அம்பிகையினுடைய பெருமையை காண்பித்துக் கொடுக்கிறதோ… எதெல்லாம் நமக்குச் சொல்கிறதோ அதெல்லாம் தந்த்ரம் என்று பார்த்தோம். அது நாம் படிக்கக் கூடிய புத்தகங்களாக இருக்கலாம். சத்சங்கமாக இருக்கலாம். அது நம் மனதிற்குள்ளேயே ஏற்படுகிற புரிதலாக இருக்கலாம். நமக்குள் ஏற்படுகிற ஆன்மிக அனுபவங்களாக இருக்கலாம்.
இதையும் தாண்டி மஹா தந்த்ரா என்றால் தந்த்ரங்கள் என்று சொல்லக் கூடிய சாஸ்திரங்களின் ரூபத்தில் இருப்பவள். அந்த தந்த்ரங்களால் பூஜிக்கப்படுபவள். சாஸ்திரம் யாரை பரப்பிரம்மம் என்று காண்பிக்கின்றதோ, அவள்தான் அம்பாள். அதனால், அவளுக்கு மகாதந்த்ரா என்று பெயர். எதெல்லாம் நமக்கு சாஸ்திரங்களை காண்பித்துக் கொடுக்கிறதோ அதனுடைய சமஷ்டி ரூபிணியாக இருப்பதால் மஹாதந்த்ரா என்று பெயர்.
இதற்கு அடுத்து விசேஷமாக சாக்தம் என்று சொல்லக்கூடிய அம்பாளின் வழிபாட்டில் 64 தந்த்ரங்கள் இருக்கின்றன. அந்த 64 தந்த்ரங்களுக்கும் தலைவியாக இருப்பதால் மஹா தந்த்ரா என்று பெயர். இன்னும் சூட்சுமமான அர்த்தம் என்னவென்றால், இந்த 64 தந்த்ரங்களிலும் தலையாய தந்த்ரம் ஒன்றுண்டு. அதற்கு தந்த்ர ராஜ தந்த்ரம் என்று பெயர். அந்த தந்த்ர ராஜ தந்த்ரத்திற்கு இன்னொரு பெயர் மஹாராஜ தந்த்ரம் என்று பெயர். இப்படிப்பட்ட எல்லா தந்த்ரங்களினாலும், முதன்மையான தந்த்ரத்தினாலும் வழிபடப்படுபவளாக இருப்பதால் மஹாதந்த்ரா என்று பெயர்.
நமக்குள் ஏற்படும் ஒவ்வொரு அனுபவத்தின் மூலமும் அம்பாள் connect ஆனால், அந்த ஒவ்வொரு அனுபவமுமே தந்த்ரம்தான்.
மஹா மந்த்ரா – இப்போது அது எப்படி அம்பாளோடு தொடர்பு கொள்ளும். இப்படி connectivity point க்குத்தான் மந்த்ரம் என்று பெயர். அதனால் அம்பாளுக்கு மஹா மந்த்ரா என்கிற பெயர் வந்தது.
குரு கொடுத்திருக்கிறார். எனக்கு இந்த உபதேசம் ஆகியிருக்கிறது. அந்த உபதேசம் ஆகியிருக்கிறது என்று செய்கிறோம். மந்திரங்கள் எத்தனையோ இருக்கலாம். எத்தனையோ ஜபங்கள் செய்யலாம். ஆனால், மந்திரத்திற்கான சித்தி எப்போது ஏற்படுகிறது என்பதுதான் முக்கியம்.
ஜீவன் அல்லது சாதகனுடைய அத்தனை சொல்லும், செயலும், வாக்கும், பிராணனும் அம்பிகையோடு தொடர்பு கொள்வது தந்த்ரம் என்று பார்த்தோம். அப்போது எது ஒன்றை உங்களை அம்பாளோடு இணைக்கிறதோ அதற்குத்தான் மந்த்ரம் என்று பெயர்.
அப்போது நம்மையும், நம்முடைய சொத் சொரூபமாக (சுய சொரூபமாக) இருக்கக் கூடிய லலிதா தேவியையும் எது நம்மோடு இணைத்து வைக்கிறதோ, அதுவே மஹா மந்த்ரம்.
எத்தனையோ மந்திரங்கள் இருக்கின்றன. அதில் நம்முடைய குருநாதர் என்ன மந்திரம் கொடுக்கிறாரோ… அதில் ஒன்றாக இருக்கலாம். அதற்குப் பிறகு, ஸ்ரீ வித்யாவில் சொல்லக் கூடிய பஞ்சதசாக்ஷரி, ஷோடசாக்ஷரி போன்ற மந்திரங்கள். அதையெல்லாம் தாண்டி, இந்த மந்திரம் பிராணனுக்குள் ஜபம் ஒன்றி எப்போது அஜபமாக மாறுகிறதோ… எப்போது அஜபா என்கிற நிலை சித்திக்கும்போது அப்போது அது மஹா மந்த்ரா என்று அழைக்கப்படுகிறது.
அதனால்தான், மனனாத் த்ராயதே இதி மந்த்ரஹா… என்றால் மனதினால் எண்ணுபவனை காப்பது என்பதே பொருளாகும்.
ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்வதுபோல் இந்த மனமானது இனிமேலும் not becoming என்கிற நிலைக்கு வரக் கூடாது. அதாவது எப்போதும் இன்னொருவராக… இன்னொன்றாக சூட்சுமமாக முயற்சித்துக் கொண்டிருக்கும். இப்படி becoming என்கிற chain ஐ எது நிறுத்துகிறதோ அதுவே மந்த்ரம் ஆகும். எது இந்த மனதை கொண்டுபோய் not becoming என்கிற நிலையில் நிறுத்துகிறதோ அதுவே மந்திரம். ஏனெனில், not becoming state தான் அம்பாள்.
இப்போது பிராணனே இங்கு ஜபமாக மாறிவிடுகிறது. அவன் தனியாக ஒரு ஜபம் பண்ண வேண்டிய அவசியமில்லை. அவனுடைய மூச்சே…. ஜபமாகி விடுகிறது. எனவே, இது அஜபாவாக மாறி விடுகிறது.
மஹாயந்த்ரா – இப்போது இந்த அஜபா என்கிற நிலை சித்தித்து விட்டால் அவனுடைய சரீரமே ஸ்ரீ சக்ரமாகி விடும். அவன் வெளியில் பார்க்கக் கூடிய இந்த பிரபஞ்சமே ஸ்ரீ சக்ரமாகி விடும். தன்னைத்தானே பார்த்துக் கொண்டால்., இந்த சரீரம் மனசு எல்லாமுமே ஸ்ரீ சக்ரம். இப்போது ஸ்ரீ சக்ர தரிசனத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை. இந்த நிலைக்குத்தான் மஹாயந்த்ரா என்று பெயர்.
மஹா ஸநா – மஹா ஆஸநா. பெரிய ஆசனத்தை கொண்டவள்.
இப்போது இந்த நிலையில் அங்கு தனி ஜீவன் இல்லை. அவனை ஆசனமாகக் கொண்டு அம்பாள் எழுந்தருளியிருக்கிறாள். பஞ்ச பிரம்மாசனா என்று அம்பாளினுடைய ஆசனத்தை சொல்வார்கள்.
யாராவது பிரம்மா, விஷ்ணு, சிவன், ருத்ரன், சதாசிவனை ஆசனமாகக் கொண்டு அமர முடியுமா? அவள் ஆசனமாக்கி அமர்ந்திருப்பதால் மஹாஸநா என்று பெயர்.
அதனால்தான் நாம் பெரிய மகான்களை, குருநாதரை பார்க்கும்போது அம்பாளாகத்தான் பார்க்கிறோம்.
இங்கு இந்த உபாசகனுடைய இருதய ஸ்தானமே மஹாஸநம். அதாவது மஹாஆஸனம். இந்த இருதயத்தில் அம்பாள் எழுந்தருளி ஆசனமாக்கி அமர்ந்திருக்கிறாள்.
மஹாயாக க்ரமாராத்யா – இப்படி நாம் எல்லாவற்றையும் பேசுகிறோம். புரிந்து கொள்கிறோம். ஆனால், எப்படி நாம் உணர்வது. நாம் பொதுவாக யாகம் என்றால் அக்னி வளர்த்து ஸ்வாஹா… என்று செய்தால்தான் யாகம் என்று நினைப்போம். ஆனால், ஸ்ரீ வித்யாவில் செய்யக்கூடிய ஒரு பூஜைக்கு மஹா யாகம் என்று பெயர். எப்படி ஹவிஸை அக்னியில் கொடுக்கிறோமே, அதுபோல ஞானம் என்கிற சித்க்னியில் இவன் துவைத விருத்திகளை ஹோமமாக செய்கிறான். அதனால் ஸ்ரீ வித்யா பூஜைக்கு மஹாயாகம் என்று பெயர்.
மஹாயாகம் என்கிற கிரமங்களின் மூலமாக பூஜை செய்யப்படும். சாமானிய அர்க்கியம், விசேஷ அர்க்கியம், யந்த்ரத்திற்கு பிராண பிரதிஷ்டை இப்படி பண்ண வேண்டும். நவாவரண அர்ச்சனை, சஹஸ்ரநாம அர்ச்சனை இப்படியிப்படி செய்ய வேண்டும். என்று நிறைய கிரமங்கள் உள்ளன. இந்த கிரமங்களெல்லாம் எதற்கு என்றால், இந்த பிரபஞ்சத்தில் நடக்கக் கூடிய செயல்கள் எல்லாமே அவளை நோக்கி திரும்புவதற்காகத்தான் இத்தனை கிரமங்கள்
வைத்திருக்கிறார்கள்.
இந்த பூஜையில் சின்னச் சின்ன விஷயங்களும் பார்த்துப் பார்த்துச் செய்வதற்கு என்ன காரணமெனில், நாம் இந்த பூஜையை விட்டு வெளியில் வந்ததற்குப் பிறகும் , நாம் வெளியில் செய்யக் கூடிய எல்லா விஷயங்களுமே அவளுக்கு
பூஜையாக மாறும்.
பூஜையில் செய்கிற விஷயங்கள் மட்டும் அவளுக்கு பூஜையாகிறதை விட, நாம் செய்கிற எல்லா விஷயங்களுமே அவளுக்கு பூஜையாவதால்தான், இந்த கிரமங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன.
இப்படித்தான் பூஜை செய்ய வேண்டும். இந்த நிறத்தில்தான் பூவை வைக்க வேண்டும். ஏனெனில், இந்த பிரபஞ்சத்தின் எல்லா செயல்களின் ரூபமாகவும் அவள்தான் இருக்கிறாள் என்று காண்பிப்பதனால், அதற்கு மஹா யாகக் கிரமம் என்று பெயர். அந்த மஹாயாகக் கிரமத்தினால் ஆராதிக்கப்படுபவள், மஹா யாக க்ரமாராத்யா என்று அழைக்கப் படுகிறாள்.
இந்த நாமத்தைப்பற்றி சொல்லும்போது ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும்.
இந்த லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் செய்த மகான், பாஸ்கரராயர். இவரே பாவனோ உபநிஷத் என்கிற ஸ்ரீ வித்யாவில் இருக்கக் கூடிய முக்கியமான உபநிஷத்திற்கும் பாஷ்யம் செய்திருக்கிறார். இந்த பாஷ்யத்திற்கு அவர் கொடுத்திருக்கக் கூடிய பெயர்தான் ஆச்சரியமானது. அந்த பெயர் என்னவெனில், மஹா யாகக் கிரமம் என்பதாகும். மஹா யாக க்ரமாராத்யா எனும் நாமத்திலிருந்தே இந்தத் தலைப்பை வைத்திருக்கிறார்.
ஏன், பாவனோ உபநிஷத்திற்கு இந்தப் பெயரை வைத்திருக்கிறார் என்று பார்க்க வேண்டும். வெளியில் இந்த ஸ்ரீ சக்ர பூஜை பார்த்துப் பார்த்து செய்கிறாயோ, இந்த ஸ்ரீ சக்ரம் எங்கே இருக்கிறது. அந்தர்முகமாக பார்.
இந்த ஸ்ரீ சக்ரம் உனக்குள்ளேயே இருக்கிறது. உன்னுடைய சரீரமே ஸ்ரீ சக்ரமாக இருக்கிறது என்று காண்பித்து கொடுக்கக் கூடியது பாவனோ உபநிஷத். அதனால்தான் இந்த பாஷ்யத்திற்கு மஹா யாகக் கிரமம் என்று பெயரை வைக்கிறார்.
இந்த நாமம் காண்பித்து கொடுக்கக் கூடியது ஒன்றுதான். தொடக்கத்தில் பஹிர்முகமாக செய்யக் கூடிய பூஜை மஹாயாக கிரமமாக இருக்கிறது. குருவின் அனுக்கிரகத்தினால் அந்த பூஜை என்ன ஆகும் எனில், பஹிர்முகத்திலிருந்து அப்படியே அந்தர்முகத்திற்குப் போய் இவனுக்குள் அந்த மஹாயாகக் கிரமம் நடக்க ஆரம்பித்து விடும். வெளியே ஸ்ரீ சக்ர பூஜை. உள்ளே அந்தர்முகமான மஹா யாக கிரமம். இதனாலேயே மஹா யாக க்ராமாராத்யா என்று பெயர்.
(சுழலும்…)

Related Stories: