கடன் சுமை நீக்கும் குபேரன்

செட்டிகுளம், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடம்ப மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்தது. உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ மன்னன் ஆட்சி செய்தபோது, வணிகன் ஒருவன் உறையூரிலிருந்து வியாபாரம் செய்ய வடக்கு திசை நோக்கி பயணமானான். வணிகன் இந்த கடம்பவனத்தை அடைந்தபோது இருள் சூழ்ந்தது. தொடர்ந்து அவனால் பயணத்தை மேற்கொள்ள இயலவில்லை. காட்டிலேயே தங்க தீர்மானித்து, ஒரு ஆலமரத்தின் மீது ஏறி அயர்ந்து தூங்கத் தொடங்கினான். நள்ளிரவு. திடீரென ஒரு தீப்பிழம்பும், அத்தீப்பிழம்பின் நடுவே ஒரு சிவலிங்கமும் தோன்றி, தேவர்களும் முனிவர்களும் அந்த சிவலிங்கத்தை வழிபடும் காட்சியும் பளிச் சென்று தோன்றி மறைந்தன. உணர்ச்சி மேலீட்டால் அவன் உடல் வெடவெடக்கத் தொடங்கியது. விடியும் வரை அவன் அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை.

விடிந்ததும், தான் கண்ட அற்புத காட்சியை மன்னனிடம் கூறுவதற்காக உறையூரை அடைந்த வணிகன் மன்னனை பராந்தக சோழனிடம்தான் கண்ட காட்சியை விவரித்தான். அப்போது சோழ மன்னனின் விருந்தினராய் அரண்மனையில் தங்கியிருந்த குலசேகர பாண்டியனும் வணிகன் சொன்னதைக் கேட்டான். உடனே, சோழனும், பாண்டியனும் தம் பரிவாரங்களை அழைத்துக் கொண்டு இக்கடம்ப வனத்திற்கு வந்தனர். வணிகன் குறிப்பிட்ட சிவலிங்கத்தை தேடி அலைந்தார்கள். அப்போது கையில் கரும்புடன் அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மாமன்னர்களை அணுகி சிவலிங்கம் இருக்கும் இடத்தைக் காட்டிவிட்டு திடீரென ஜோதி வடிவாக மறைந்தார். ஜோதி மறைந்த கிழக்கு திசையை மன்னர்கள் வியப்புடன் நோக்கினர். தொலைவில் ஒரு குன்றின் மீது முருகப் பெருமான் தண்டாயுத பாணியாகக் காட்சியளித்தார்! பக்தி பரவசத்தில் ஆழ்ந்த சோழனும், பாண்டியனும், குன்றின் தோன்றிய தண்டாயுதபாணி சுவாமிக்கு மலைமீது ஓர் ஆலயமும், ஜோதியின் நடுவே தோன்றிய சிவப் பெருமானுக்கு அதே இடத்தில் ஓர் ஆலயமும் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டன. அவற்றில் ஒன்றான சிவாலயமே செட்டிகுளத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். ஊரின் நடுவே, கிழக்கு நோக்கி, ஒருநிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது, ஆலயம். பெரம்பலூர் மாவட்டத்திலேயே மிக உயர்ந்த ராஜகோபுரம் இதுதான் என்கிறார்கள். ராஜகோபுரத்தை கடந்ததும் முன்பிராகாரமும் அதனைத் தொடர்ந்து ஸ்தபன மண்டபம். மண்டபத்தின் வடக்கு, தெற்கு தூண்கள் இரண்டிலும் அற்புத வடிவில் துவார பாலகர் திருமேனிகள் வரவேற்கின்றன.

மண்டபத்தின் மையப் பகுதியை தாங்கி நிற்கும் நான்கு தூண்களிலும் இந்த ஆலயத்தை திருப்பணி செய்த நான்கு மாமன்னர்களின் உருவங்கள் சிற்பங்களாய் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த மன்னர்கள் ஒரே விதமாக வலதுபுஜத்தில் கங்கண காப்புகளும், இடது முன்கையில் காப்புகளும், இடையில் குறுவாளுமாகக் காட்சி தருகின்றனர். மண்டபத்தின் மைய, மேல் விதானத்தில் வானவர்கள் சூழ, திருஞான சம்பந்தர், பதஞ்சலி முனிவர், பிருங்கி மகரிஷி, வியாக்கிர பாதர் ஆகியோர் கூடியிருக்க, சிவாச்சாரியார் சிவபெருமானுக்கு ஆராதனை செய்யும் காட்சி வண்ண ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. மண்டபத்தின் நடுவே, கொடிக் கம்பம், பலிபீடம், நந்தி மூன்றும் ஒரே நேர் வரிசையில் அமைந்துள்ளன. கொடிகம்பத்தைத் தாண்டி உட்பிரகார மண்டப நுழைவாயிலின் மீது கயிலாய காட்சியாக சிவபெருமானும் பார்வதியும் காளை வாகனத்தின் மீது அமர்ந்திருக்க, மயில் வாகனத்தில் சுப்ரமணியர், வள்ளி – தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். விநாயகரும் உடனிருக்கிறார். இந்த குடும்ப காட்சியினை சப்த ரிஷிகள் வணங்க, சிவாச்சாரியார் பூஜை செய்யும் காட்சி அற்புத சுதை வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்து உட்பிரகார மண்டபம். அழகிய வேலைப்பாடுடன் கூடிய பத்து இசைத் தூண்கள், நம் தட்டலுக்கு மதிப்பளித்து இனிய இசை எழுப்புகின்றன. மண்டபத்தின் கன்னி மூலையில் வரகுண கணபதி, அருகே ஐந்து தலைநாகருடன் காட்சி தருகிறார். அடுத்துள்ள மகாமண்டப நுழைவாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள், சுதை வடிவத்தினராக. அர்த்த மண்டபத்தின் முன் நந்தியும், பலிபீடமும் இருக்க, அடுத்துள்ள கருவறையில் ஏகாம்பரேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவக்கோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும் நர்த்தன விநாயகரும், மேற்கில் மகாவிஷ்ணுவும், வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் அருள்கின்றனர். உட்சுற்று பிராகாரத்தில் தென்புறம் 63 நாயன்மார்களின் சந்நதி உள்ளது. மேற்கில் விநாயகர் சந்நதியும், வேல் வடிவ திருவாசியுடன் மயில் வாகனத்தில் முருகர், வள்ளி – தெய்வானை சந்நதியும், அடுத்து கஜலட்சுமி சந்நதியும் உள்ளன. வடபுறம் சண்டிகேஸ்வரர்; சனி மூலையில் நவகிரக நாயகர்கள்.

கிழக்குப் பிராகாரத்தில் பைரவர் மற்றும் சூரிய பகவான் கொலு விருக்கின்றனர். இறைவன் சந்நதியின் வடபுறம் குபேர மூலையில் இறைவி காமாட்சியம்மன் தனி சந்நதியில் திருக்கோலம் காட்டுகிறாள். அம்மன் சந்நதிமுன் வாசலின் கிழக்கே நந்தி மண்டபமும் பலிபீடமும் உள்ளன. நுழைவாயிலின் இருபுறமும் சுதையிலான இரண்டு துவார பாலகிகள் உள்ளனர். அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் அன்னை காமாட்சி, நின்ற கோலத்தில் புன்னகை தவழ, அழகே உருவாக அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு நான்கு கரங்கள். தனது மேல் வலதுகரத்தில் உத்திராட்ச மாலையையும், மேல் இடது கரத்தில் தாமரை மொட்டினையும். கீழ் இரண்டு கரங்களில் அபயமும், வரதமும் கொண்டு காட்சி தருகிறாள். அன்னையின் கருவறை தேவகோட்டத்தில் தெற்குபுறத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தியும், மேற்கில் லட்சுமி தேவி மற்றும் ரிஷப வாகனத்தின் மீது பிரதோஷ நாயகனாய் சிவனும், பார்வதியும், வடக்கில் சரஸ்வதியும், துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். துர்க்கைக்கு எதிரே சண்டிகேஸ்வரி சந்நதி. ஆலய தலவிருட்சம், வில்வம். தேரோடும் வடக்கு வீதியில் வடமேற்கில் சிவகங்கை தீர்த்தம் உள்ளது. சிவபெருமான் தலையினின்று விழுந்த கங்கை நீர் இக்குளத்தில் சேர்ந்துள்ளதாக ஐதீகம். இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களும், உடற் பிணிகளும் அகலும் என்கிறார்கள்.

சுமார் 800 ஆண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தில் இன்னொரு சிறப்பு அம்சமும் உண்டு. பொதுவாக ஆலயங்களில் குபேரனின் உருவம் சிற்பமாகவோ, கதை வடிவிலோ, கல் திருமேனியாகவோ காணப்படுவது வழக்கம். ஆனால் இங்கே, கல் தூண்கள், தேவகோட்டம், கோபுர முகப்பு என மொத்தம் 12 இடங்களில் குபேரனின் சிற்ப வடிவில் காட்சி தருகிறார். அதாவது மேஷம் முதலான 12 ராசிகளுக்கும் இந்த குபேரர்கள் அருள் வழங்குகிறார்கள். ஒவ்வொரு ராசிக்காரரும், அந்தந்த ராசி குபேரனை வணங்கி, தம் வறுமை, துன்பம் நீங்கி, மனமகிழ்வுடனும் செல்வ செழிப்புடனும் வாழ இயலும் என பக்தர்கள் நம்புகின்றனர். வேண்டுதல் நிறைவேற குறிப்பிட்ட குபேரனுக்கு `குபேர ஹோமம்’ நடத்துவதால் தடைபட்ட திருமணம் நடந்தேறுவதுடன் இழந்த பொருளும், கைவிட்டுப் போன சொத்துக்களும் மீண்டும் கிடைக்கும்; கடன் சுமையிலிருந்தும் நிரந்தரமாக மீளலாம் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. இந்த 12 தவிர, மகா குபேரனின் சிற்பம் ஒன்றும் ஆலய கோபுரத்தின் உட்புறம் வடக்குத் திசையில் அமைந்துள்ளது.

திருச்சி, துறையூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது செட்டிகுளம்.

Related Stories: