கண்ணமங்கலம், மே 18: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுத் சிறப்புமிக்க ‘நன்னீர் குளத்தீஸ்வரர் கோயில் குளம்’ மற்றும் அதன் கரையில் உள்ள பிரமாண்டமான ஆலமரங்களைப் போர்க்கால அடிப்படையில் பாதுகாக்க அரசு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சம்புவராய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இப்பிரமாண்டமான குளம், இந்த ஊருக்கு ‘கொளத்தூர்’ என்ற பெயர் வரக் காரணமாக அமைந்த பெருமை வாய்ந்தது. பல நூற்றாண்டுகளாக இப்பகுதி பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீர் செறிவூட்டும் பிரதான நீர்நிலையாகவும் இது விளங்கி வருகிறது.
