திருவண்ணாமலை மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் தர்ப்பகராஜ் திடீர் ஆய்வு

 

திருவண்ணாமலை, மே 22: திருவண்ணாமலை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட முத்து விநாயகர் கோயில் தெருவில் அமைந்துள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சைக்கு வந்திருந்த மருத்துவ பயனாளிகளிடம், உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கனிவுடன் நடந்துகொள்கின்றனரா என கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் அத்தியாவசிய மருந்துகள் இருப்பு உள்ளதா என ஆய்வு செய்தார். பின்னர், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதேபோல், தாய் சேய் நலன் பராமரிப்பில் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமக்களிடம் நற்பெயர் பெற்றிருப்பதால், அதனை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் தர்ப்பகராஜ், நிலுவையில் உள்ள பட்டா மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்தார்.

மேலும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது விரைவாக தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், பள்ளி மாணவர்கள் சான்றுகளுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, தாமதமின்றி சான்றுகள் வழங்க வேண்டும் என்றார். ஆய்வின்போது, மாவட்ட சுகாதார அலுவலர் பிரகாஷ், தாசில்தார் மோகன்ராமன் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

Related Stories: