×

ஆண்டுக்கு ரூ.20 லட்ச சம்பளம் கழிப்பறை இல்லை, லீவும் எடுக்க முடியாது: அரசு வேலையை உதறிய 25 வயது இளைஞர்

 

புதுடெல்லி: அரியானா மாநிலம் குருக்சேத்ரா என்ஐடியில் படித்துவிட்டு, தனது 22-வது வயதில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் சம்பளத்தில் பணியில் சேர்ந்தவர் சவுரப் மிட்டல். கைநிறைய சம்பளம் என பலரும் ஆசைப்படும் இந்த ‘கனவு’ வேலையை, வெறும் இரண்டே ஆண்டுகளில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

வேலையை உதற முக்கியக் காரணங்கள் என சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்ட காரணங்கள்:

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள குடோன் ஒன்றுதான் அவரது அலுவலகம். அடிப்படை வசதிகள் இல்லாத அலுவலகத்தில் குடிக்க தண்ணீர் இல்லை. ஒரு கழிப்பறை கூட கிடையாது. இதுகுறித்து மேலதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

’லீவு’ என்ற வார்த்தைக்கே அங்கு இடமில்லை. ஞாயிற்றுக்கிழமைகளிலும், நள்ளிரவிலும் கூட வேலை தொடர்பான அழைப்புகள் வரும். விற்பனை குறைந்தால் அதிகாரிகள் நேரடியாகவே தகாத வார்த்தைகளால் திட்டுவார்கள். மேலதிகாரிகள் வரும்போது அவர்களை ஏர்போர்ட்டில் அழைத்து வருவது, ஓட்டல் அறை புக் செய்வது என வேலைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத தனிப்பட்ட வேலைகளையும் செய்ய அவர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

தொடர் மன உளைச்சலைத் தரக்கூடிய இந்த பணிச்சூழலில் வாழ்நாள் முழுவதையும் கழிக்க முடியாது என முடிவெடுத்த சவுரப், வேலையை ராஜினாமா செய்துள்ளார். குடும்பத்தினர் ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்தாலும், அவரது தாய் அவருக்கு ஆதரவாக நின்றார். சவுரப், தனது அடுத்தக்கட்ட எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்காக குர்கானில் எம்.பி.ஏ படிப்பில் சேர்ந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அவரது பதிவு வைரலாகி வருகிறது.

Tags : New Delhi ,NIT Kurukshetra ,Haryana ,Saurabh Mittal ,Bharat Petroleum ,
× RELATED நிலைக் குழு கூட்டங்களில் 53% எம்பிக்கள்...