×

கேரள முதல்வராக வி.டி.சதீசன் இன்று பதவி ஏற்கிறார்: 21 அமைச்சர்கள் அடங்கிய பட்டியலை கவர்னரிடம் வழங்கினார்

 

திருவனந்தபுரம்: கேரளத்தில் வி.டி. சதீசன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு இன்று பதவி ஏற்கிறது. 21 அமைச்சர்கள் அடங்கிய பட்டியலை நேற்று அவர் கவர்னரிடம் வழங்கினார். கேரள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. கடந்த தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த இடதுசாரி கூட்டணிக்கு இம்முறை 35 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.

பாஜ முதன் முதலாக 3 தொகுதிகளை கைப்பற்றியது. இதற்கிடையே முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளரும், எம்பியுமான கே.சி. வேணுகோபால், மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா மற்றும் வி.டி. சதீசன் ஆகியோர் போட்டி போட்டனர்.
பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் வி.டி. சதீசனை முதல்வராக காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்தது. இது கே.சி. வேணுகோபாலுக்கும், ரமேஷ் சென்னித்தலாவுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து கே.சி. வேணுகோபாலுக்கு காங்கிரசில் உயர் பதவி வழங்குவதாகவும், ரமேஷ் சென்னித்தலாவுக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்குவதாகவும் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் சமாதானம் ஆனார்கள். இந்நிலையில் புதிய அரசின் பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் மத்திய ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எம்பி., தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் வி.டி. சதீசன் உள்பட 21 அமைச்சர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர். கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கரை நேற்று சந்தித்த வி.டி.சதீசன் அவரிடம் அமைச்சர்கள் பட்டியலை வழங்கினார். பதவியேற்பு விழா மேடையில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது என்று கவர்னர் அறிவுறுத்தி உள்ளார்.

* அமைச்சர்கள் விவரம்

வி.டி. சதீசன் (முதல்வர்), ரமேஷ் சென்னித்தலா, முரளீதரன், சன்னி ஜோசப், லிஜு, விஷ்ணுநாத், ஏ.பி. அனில்குமார், ரோஜி எம். ஜான், பிந்து கிருஷ்ணா, சித்திக், துளசி, ஓ.ஜே. ஜெனீஷ், குஞ்ஞாலிக்குட்டி, மோன்ஸ் ஜோசப், ஷிபு பேபி ஜான், கே.எம். ஷாஜி, என். சம்சுதீன், பி.கே. பஷீர், அனூப் ஜேக்கப், சி.பி. ஜான், வி.இ. அப்துல் கபூர். மந்திரிசபையில் காங்கிரஸ் சார்பில் 11 அமைச்சர்களும், முஸ்லிம் லீக் சார்பில் 5 அமைச்சர்களும் உள்ளனர். சபாநாயகர் பதவி முன்னாள் அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Tags : V.D. Satheesan ,Kerala ,Chief Minister ,Thiruvananthapuram ,Congress ,Kerala Assembly ,United Democratic Front ,
× RELATED நிலைக் குழு கூட்டங்களில் 53% எம்பிக்கள்...