திட்டக்குடி: கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்து கல்லூர் ஊராட்சி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திட்டக்குடி செல்லும் மாநில நெடுஞ்சாலையும் உள்ளது. இந்த சாலையின் வழியாக சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு பேருந்துகள், பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்தும் செல்கின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள வீடுகள் அருகில், அப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து இந்த சாலையோரம் குவியல், குவியலாக கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை ஓரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அதே இடத்தில் குப்பை கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
