கூடலூர்: கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் பெரியார் புலிகள் காப்பகம் பகுதிக்குள் உள்ள பழங்குடியினர் குடியிருப்புகளில் கைவிடப்பட்டிருந்த விவசாய நிலங்களில் மீண்டும் சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு பின்பு இந்த முறை பழங்குடியினரின் நிலங்களில் மஞ்சள் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அம்மாநில வனத்துறையின் முன்னெடுப்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், பழங்குடியின மக்களுக்கு பொருளாதார நிலைத்தன்மையை வழங்குவதோடு, மனிதர் வனவிலங்கு மோதல்களை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெரியாறு புலிகள் காப்பகத்தின் ஐந்து சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழுக்கள் (ஈடிசி) மூலம் இந்த சாகுபடி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டத்திற்காக ‘அலப்புழா ஃபிங்கர் டர்மெரிக்’ (ஏஎப்டி) வகை மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. பாலியக்குடி பகுதியில் முதற்கட்டமாக 1.5 ஏக்கரில் பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் 50 ஏக்கரில் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பழங்குடியினர் குடியிருப்புகளில் மீண்டும் குருமிளகு சாகுபடியை உயிர்ப்பிக்கவும், இலவங்கப்பட்டை, குடம்புளி, கிராம்பு, ஜாதிக்காய் மற்றும் இஞ்சி போன்ற பயிர்களையும் வளர்க்கும் திட்டம் உள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘காட்டுமஞ்சள் வகையும் பரிசோதனை அடிப்படையில் சாகுபடி செய்யப்படுகிறது. காட்டு விலங்குகள் பொதுவாக மஞ்சளை சேதப்படுத்தாததால், இந்தப் பயிருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. முழுமையாக இயற்கை விவசாய முறைகளே பின்பற்றப்படும்’’ என தெரிவித்தனர்.
மேலும், காட்டுப்பகுதிக்குள் நடைபெறும் இந்த விவசாயம் பழங்குடியின மக்களுக்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்தும் என்றும், அதன்மூலம் அவர்கள் வன பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்க உதவும் என்றும் வனத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. சமீபத்தில் பெய்த கோடை மழையால் மண்ணில் போதிய ஈரப்பதம் ஏற்பட்டுள்ளதால், இம்மாதம் மஞ்சள் நடவு செய்ய ஏற்ற சூழல் நிலவுகிறது. கடந்த ஆண்டு மூணாறு வனப் பிரிவு பகுதியில் கைவிடப்பட்ட நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட மஞ்சள் சாகுபடி மிகுந்த வெற்றியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
