அரசியல் கட்சி தலைவர்கள், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் சட்டமன்றத்திலேயே பதிலளிக்க கற்று கொள்ள வேண்டும்: வீரபாண்டியன் அட்வைஸ்

திருவாரூர்: திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் நேற்று அளித்த பேட்டி: த.வெ.க.விற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த ஆதரவு குறித்த தீர்மானம் திருவாரூரில் 3 நாட்கள் நடைபெற்ற மாநில குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி நடைபெற வேண்டும் என்பதே எங்களுக்கான நோக்கம். அந்த வகையில் புதிய அரசின் செயல்பாடு இருக்கும் என்று நம்புகிறோம். அரசின் செயல்பாட்டிற்கு ஏற்ப எங்களது அணுகுமுறையும் இருக்கும்.

கடந்த திமுக ஆட்சியில் எண்ணற்ற பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அந்தத் திட்டங்கள் மட்டுமின்றி கூடுதலான திட்டங்களும் செயல்படுத்தப்பட வேண்டும். நல்லாட்சி தர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும்தான் நாங்கள் ஆதரவு அளித்துள்ளோம். குதிரை பேரம் பற்றி நாங்கள் அறியாதவர்கள். நாட்டின் நலன் தான் எங்களுக்கு முக்கியம். எனவே குதிரை பேரம் பற்றி கருத்து எதுவும் கூற முடியாது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சட்டமன்றத்திலேயே பதிலளிப்பதற்கு முதல்வர் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதிமுகவில் வெற்றி பெற்றுள்ள எம்எல்ஏக்கள் இரு பிரிவுகளாக பிரிந்து அதில் ஒரு பிரிவினர் புதிய அரசுக்கு ஆதரவு அளித்துள்ள சம்பவத்தில் சட்ட வல்லுநர்கள் ஒன்று கூடி சட்டம் தன் கடமையை செய்யும் என நம்புகிறோம். மேலும் மேட்டூர் அணையில் குறைந்த அளவு நீர் இருந்து வருவதால் குறுவை சாகுபடிக்கு தேவையான நீரினை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: