‘கிளாண்டர்ஸ்’ தொற்றால் குதிரை உயிரிழப்பு: நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

 

சென்னை: மனிதர்களுக்கும் பரவும் தன்மை கொண்ட ‘கிளாண்டர்ஸ்’ தொற்று பாதிப்பால் சென்னையில் சவாரிக்காக பயன்படுத்தப்பட்ட குதிரை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தத் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் குதிரை சவாரிக்குப் பயன்படுத்தப்படும் குதிரை ஒன்று உடல்நலக்குறைவால் பலவீனமடைந்த நிலையில், அதன் உரிமையாளர் பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அந்த குதிரையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதன் உடலில் பல இடங்களில் புண்கள், வீங்கிய கட்டிகள், கடுமையான சதை சுருக்கம் போன்ற அறிகுறிகளை கண்டறிந்தனர்.

இதையடுத்து, கிளாண்டர்ஸ் நோய் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஒன்றிய அரசின் ஐசிஏஆர்-தேசிய குதிரை ஆராய்ச்சி மையத்தின் (என்ஆர்சிஇ) ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அந்த மாதிரிகளப்ை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் ‘கிளாண்டர்ஸ்’ நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், நோய் தொற்றுக்குள்ளான குதிரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இதையடுத்து, தேசிய குதிரை ஆராய்ச்சி மையம் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறைக்கு அவசர அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட குதிரையுடன் இருந்த அனைத்து குதிரைகளையும் உடனடியாகத் தனிமைப்படுத்த வேண்டும், அருகிலுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் பரிசோதனை நடத்த வேண்டும், நோய் பரவலை கட்டுப்படுத்த தீவிரமான கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாகச் சென்னையில் சவாரிக்காக பயன்படுத்தப்படும் சுமார் 140 குதிரைகளிடமிருந்து மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குதிரைகள் வளர்க்கப்படும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. கிளாண்டர்ஸ் நோய் பரவல் தொடர்பாக பொதுமக்கள், குறிப்பாக குதிரைகள் அதிகமாக பராமரிக்கப்படும் பகுதிகளில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட விலங்குகளை தொடாமல் உடனடியாக கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவையிலும் இதற்கு முன்பு இதேபோன்ற ஒரு கிளாண்டர்ஸ் நோய் பாதிப்பு பதிவாகியிருந்தது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அப்போது, பாதிக்கப்பட்ட குதிரை வழக்கமான நடைமுறைகளின் படி அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, கர்நாடக மாநிலத்தில் கிளாண்டர்ஸ் தொற்றால் குதிரைகள் பாதிக்கப்பட்டபோது குதிரை சவாரிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: