ஆறுமுகநேரி, மே 15: ஆறுமுகநேரி – அடைக்கலாபுரம் சாலையில் முன் அறிவிப்பின்றி வைக்கப்பட்ட பேரிகார்டுகள், தினகரன் செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டன. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு எளிதாக செல்ல ஆறுமுகநேரி- அடைக்கலாபுரம் சாலையை பாதயாத்திரை பக்தர்கள், வாகன ஓட்டிகள், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள், பல்வேறு நிறுவனங்களுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் அனைத்தும் பயன்படுத்தி வருகின்றன.
இச்சாலையில் திருச்செந்தூர் காவல்நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில் தனியார் ஓட்டல் அருகே முன் அறிவிப்பின்றி இருபுறமும் 4 பேரிகார்டுகளை வைக்கப்பட்டன. இதனால் இந்த இடத்தை வாகனங்கள் கடந்து செல்ல பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பாதயாத்திரை பக்தர்களும் சாலையின் நடுவே சுமார் 100 மீட்டர் சென்று கடந்து செல்ல வேண்டியிருந்தது. இதனால் இப்பகுதியில் விபத்து அபாயம் நிலவியது.
இதுகுறித்து நேற்று தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட காவல் துறை சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆறுமுகநேரி – அடைக்கலாபுரம் சாலையில் முன் அறிவிப்பின்றி திடீரென வைக்கப்பட்ட பேரிகார்டுகள், நேற்று காலையில் அகற்றப்பட்டன. இந்நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்ட போலீசாருக்கும், செய்தி வெளியிட்ட தினகரனுக்கும் இப்பகுதி மக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
