விருதுநகர், மே 15: பாஜ அரசை கண்டித்து விருதுநகரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். உத்திரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் தொழிலாளர்கள் கூலி உயர்வு, ஒப்பந்தமுறையை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். இத்தொழிலாளர்களை அங்குள்ள பாஜ அரசு காவல்துறை மூலம் தடியடி தாக்குதல் மற்றும் கைது செய்து வருகிறது. இதனைக் கண்டித்து விருதுநகரில் பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
துணை பொது மேலாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இளமாறன் தலைமை வகித்தார். ஜெயப்பிரகாஷ், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கி வைத்து மாநில அமைப்பு செயலாளர் கணேசமூர்த்தி பேசினார். மாவட்ட செயலாளர் குருசாமி நிறைவில் பேசினார். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வளர்மங்கை நன்றி கூறினார். இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
