சென்னை: நாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடைவிதிக்கக்கோரி வரும் மே 20ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட சுமார் 12 லட்சம் மருந்தகங்கள் முடிவு செய்துள்ளன. முறையான சரிபார்ப்பு இன்றி ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யப்படுவதால் நோயாளிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா காலத்தில் நிறைவேற்றப்பட்ட மின் மருந்தக செயல்பாடு குறித்த அரசாணையை ஒன்றிய அரசு உடனே திரும்பப்பெற வலியுறுத்தி வேலைநிறுத்தம் என விளக்கம் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; முறைப்படுத்தப்படாத ஆன்லைன் மருந்து விற்பனையால் நோயாளிகளின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. முறையான சரிபார்ப்பு இன்றி மருந்துகள் விநியோகிக்கப்படுவதால், ஒரே மருந்துச் சீட்டைப் பலமுறை பயன்படுத்தும் அவல நிலை காணப்படுகிறது.
ஆன்டிபயாடிக், போதை தரக்கூடிய மருந்துகள் தடையின்றி கிடைப்பதற்கு வழிவகுக்கிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி மருந்துச் சீட்டுகளைப் பயன்படுத்தி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால், மருந்து எதிர்ப்புத்திறன் (ஏஎம்ஆர்) அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும், கொரோனா காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிகத் தளர்வுகளைப் பயன்படுத்தி, ஆன்லைன் நிறுவனங்கள் மருந்து விதிகளை மீறி வருகின்றன.
எனவே, மின் மருந்தகச் செயல்பாடுகள் தொடர்பான அரசாணைகளை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மருந்தகங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்தத் தொழிலை நம்பியுள்ள சுமார் 5 கோடி மக்களின் வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்படும். மே 20-ம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
