செம்பரம்பாக்கம் ஏரி பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்: பொதுமக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

 

குன்றத்தூர்: செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ள பகுதியை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு, மன்னர் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட செயற்கை ஏரி இதுவாகும். 9 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள இந்த ஏரியின் மொத்த நீரின் கொள்ளவு 3645 கன அடியாகவும், உயரம் 24 அடியாகவும் உள்ளது. சென்னையில் ஓடும் `அடையாறு’ ஆற்றின் பிறப்பிடமாகவும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. கோடை காலத்திலும் வற்றாமல் இருந்து சென்னை மக்களின் தாகம் தீர்க்க குடிநீர் வழங்குவதுடன், அடைமழை காலத்தில் வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை காப்பதிலும் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியப் பங்கு வகிக்கிறது.

மேலும், செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள குன்றத்தூர், சிறுகளத்தூர், கொல்லச்சேரி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் மீன்பிடி தளமாகவும் உள்ளது. இங்கு கிடைக்கும் மீன்கள் அதிக ருசியுடையதாகக் கருதப்படுகிறது. இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான அசைவ பிரியர்கள் வாரந்தோறும் குன்றத்தூருக்கு வருகை தந்து, செம்பரம்பாக்கம் ஏரி மீன்களை குறைந்த விலைக்கு வாங்கிச் செல்கின்றனர். இவ்வளவு சிறப்பு மிக்க செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப்பார்க்க ஏராளமான பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். ஆனால், அவ்வாறு வருகை தரும் பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்காத வகையில் இரும்பு கேட் அமைத்து மூடி வைத்துள்ளது ஏரியை பாதுகாத்து வரும் பொதுப்பணித்துறை நிர்வாகம்.

இதனால், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தங்களது வாகனங்களில் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப் பார்க்க வருகை தரும் பார்வையாளர்கள் பெரும்பாலானோர், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையே தற்போது உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் கூறினாலும் கூட, தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, வைகை, கல்லணை மற்றும் ஆழியாறு போன்ற அணைகள் அனைத்துமே பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக இருந்தாலும் கூட, அங்கெல்லாம் பார்வையாளர்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு, அரசால் அனுமதிக்கப்பட்டுத்தான் வருகின்றனர்.

இதன் மூலம் அரசுக்கும் நாள்தோறும் அதிக வருவாய் கிடைத்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு செம்பரம்பாக்கம் ஏரியையும் சிறந்த சுற்றுலாத்தலமாக அறிவித்து, அதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் முதல் கட்டமாக பார்வையாளர்களை கவரும் வகையில், பார்வையாளர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஏரியை சுற்றியுள்ள முட்செடிகள், புதர்களையெல்லாம் அகற்றி, அந்த இடங்களை யெல்லாம் சுத்தம் செய்து, அழகிய மரங்கள், பல வர்ண பூச்செடிகளை நட்டு வைத்து, சிறுவர்கள் விளையாடும் வகையில் கேளிக்கை பூங்காக்கள் அமைத்து ஏரியை அழகுபடுத்த வேண்டும்.

மேலும் பெரியவர்கள், காதலர்களை கவரும் வகையில் படகு குழாம் அமைக்க வேண்டும். இதன் மூலம் நாள்தோறும் புதிது புதிதாக ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஏரியை பார்வையிட வருகை தருவர். ஏனெனில், சென்னைக்கு அருகே இவ்வாறு பெரிய சுற்றுலாத் தலங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கருத்தில் கொண்டு அரசு செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்றுவதன் மூலம் தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையும் மேம்படும். வருகை தரும் பார்வையாளர்களால் அரசுக்கும் அதிக வருவாய் கிடைக்கும். அத்துடன் சென்னை சிறந்த சுற்றுலாத் தலமாகவும் உருவெடுக்கும்.

இதன் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்து, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வழிவகை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு செம்பரம்பாக்கம் ஏரியை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: