திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆதிக்கம் செலுத்தும் வியாபாரிகள்: விவசாயிகள் பாதிப்பு

 

* நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வியாபாரிகளின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் நவரை பருவத்திற்கான நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய ஏதுவாக தமிழக அரசின் சார்பில் மாவட்டத்தில் 40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நெல் பயிர் சாகுபடி பரப்பளவு குறித்து வருவாய்த்துறை, வேளாண் துறை, புள்ளியியல் துறை அலுவலர்கள் இணைந்து அரசுக்கு விவரங்கள் வழங்கப்படுகிறது.

அதன்படி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொள்முதல் செய்ய நெல் குறித்த புள்ளி விவரங்களை பெற்று ஊழியர்கள், பதிவு செய்த விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்கின்றனர். இருப்பினும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் நெல்லுக்கு அரசு ஓரிரு நாட்களில் தொகை வங்கி கணக்கில் செலுத்துவதால் பெரும்பாலான விவசாயிகள் நெல் பயிர் சாகுபடிக்கு ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், மாவட்டத்தில் நெல் சாகுபடி அதிகரித்துள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுடன், வியாபாரிகள் கைகோர்த்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த வியாபாரிகள் விவசாயி பெயரில் நேரடி கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்து தங்கள் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை வாங்கி வந்து, தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து அதிக லாபம் சம்பாதிக்கின்றனர். இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் வாகனங்களில் வைத்து பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோணி தட்டுப்பாடு, இட நெருக்கடி பிரச்னைகளால் விவசாயிகள் நெல் விற்பனை செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேலும், சீசன் முடியும் நிலையில் விவசாயிகள் நெல் அறுவடைக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெயர் பதிவு செய்ய சென்றால், அரசு இலக்கின்படி நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிதாக பெயர் பதிவு செய்ய முடியாது என்று ஊழியர்கள் கூறுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் முறைகேடுகளை தடுத்து தகுதியான விவசாயிகள் பயன்பெறுவதை உறுதிப்படுத்த மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை
பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றி வரும் பட்டியல் எழுத்தர்கள் (பிசி), இடைதரகர்களுடன் கூட்டு சேர்ந்து பதிவு செய்யாத வியாபாரிகளிடமிருந்து நெல்லை குறைந்த விலைக்கு வாங்கி அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருவதாக கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் 10 ரூபாய் இயக்கம் சார்பில் நேற்று ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகம் நேற்று வந்திருந்தனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் வட்டாட்சியர் சரஸ்வதி, நுகர்பொருள் வாணிப கழகம் அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ராஜாநகரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இடைத்தரகர்கள் மூலம் பெறப்படும் நெல் கொள்முதல் தடுக்க வேண்டும், அங்கு பணியாற்றி வரும் பட்டியல் எழுத்தரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும். பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் உடனடியாக கொள்முதல் செய்து லாரிகளில் கிடங்குகளுக்கு அனுப்ப வேண்டும். விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைக்கு ரூ.50 வசூலிப்பது தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். விவசாயிகள் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றி முறைகேடுகள் தடுத்து விவசாயிகள் அனைவரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனைக்கு கலெக்டரிடம் சிறப்பு அனுமதி பெற்று கொள்முதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.

Related Stories: