‘முற்றிலும் ஏற்க முடியாதது’ ஈரானின் சமாதான திட்டத்தை நிராகரித்தார் அதிபர் டிரம்ப்: போர் நிறுத்தத்தில் சிக்கல்

வாஷிங்டன்: மேற்கு ஆசியா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஈரானின் சமாதான திட்டம் ‘முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய போர் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் சீர்குலைந்துள்ளது. இதனால் பல நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு உலக நாடுகள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் ஒப்பந்தத்திற்கு ஈரான் நேற்று முன்தினம் பதிலளித்தது. இது போரை முடிவுக்கு கொண்டு வருவதில் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஈரானின் பதில் பரிந்துரையை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் நேற்று தனது ட்ரூத் சமூக ஊடக தள பதிவில், ‘‘ஈரானின் பிரதிநிதிகள் என அழைக்கப்படுபவர்களின் பதிலை இப்போதுதான் படித்தேன். எனக்கு அது பிடிக்கவில்லை. அது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. சுமார் 50 ஆண்டாக அமெரிக்காவுடன் ஈரான் விளையாடி வருகிறது. அவர்கள் இனி சிரிக்க மாட்டார்கள். அவர்களுடைய பதில் எனக்கு பிடிக்கவில்லை’’ என கூறி உள்ளார்.

பாகிஸ்தான் மூலமாக ஈரான் அனுப்பி வைத்த பதில் பரிந்துரை திட்டத்தில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற்றிருந்தன என்பதை டிரம்ப் விளக்கமாக கூறவில்லை. இதற்கிடையே, அமெரிக்கா தொடர்ந்து நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சமீபத்தில் முன்மொழிவுக்கான ஈரானின் பதிலில் வரம்பு மீறிய எந்த அம்சமும் இடம் பெறவில்லை என்றும் அவர் கூறி உள்ளார். இதன் காரணமாக அமெரிக்கா-ஈரான் போர் முடிவடைவதில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அதிபர் டிரம்ப் 3 நாள் பயணமாக நாளை சீனா செல்கிறார். போர் சூழலுக்கு மத்தியில் ஈரானுடன் நெருக்கமாக உள்ள சீனாவுக்கான டிரம்பின் பயணம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: