காத்மண்டு: துருக்கி விமானம் நேபாளத்தில் தரை இறங்கும்போது தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இருந்து துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிகே 726 என்ற பயணிகள் விமானம் நேற்று நேபாளத்துக்கு புறப்பட்டு சென்றது. இதில் 227 பயணிகள் மற்றும் 11 பணியாளர்கள் உள்பட மொத்தம் 288 பேர் சென்றனர்.
இந்த விமானம் நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 6.45 மணிக்கு தரை இறங்கியது. அப்போது விமானத்தின் டயரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து விமான நிலைய செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, தீ அணைக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள், பணியாளர்கள் அனைவரும் அவசர கதவுகள் வழியாக பத்திரமாக வௌியேற்றப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக காத்மண்டு விமான நிலையம் தற்காலிகமாக ஒருமணி நேரத்துக்கு மூடப்பட்டு, காலை 8.30 மணிக்கு பிறகு வழக்கமான விமான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கின. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
