புதுடெல்லி: 2026ம் ஆண்டுக்கான கியூட் இளங்கலை நுழைவுத் தேர்வு நாளை மறுநாள் (மே 11ம் தேதி) முதல் மே 31ம் தேதி வரை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 15 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வு கணினி வழித் தேர்வாகவே நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதனையொட்டி தேர்வர்கள் தேர்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய உடை, விதிமுறைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பொருட்கள் குறித்து அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி தேர்வர்கள் அவர்களது நம்பிக்கையின் அடிப்படையில் சமயச் சின்னங்கள் அல்லது பொருட்களை அணிந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால் அவற்றை சோதனையிடுவதற்கு ஏதுவாக முன்கூட்டியே தேர்வு மையத்துக்கு வருகை தர வேண்டும். மதம் சார்ந்த கயிறுகளை அணிந்து செல்லவும் அனுமதி உண்டு. வெளிர் நிறத்திலான மெல்லிய ஆடைகளை அணிந்து வரலாம் என்றும் தேவைப்படும்பட்சத்தில் கம்பளி ஆடைகளை தேர்வர்கள் அணிந்து செல்லலாம் என்றும் ஆனால் அதற்காக முன்கூட்டியே வந்து சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். சாதாரண காலணிகள், செருப்புகள் அணிந்து வரலாம்.
