மேற்குவங்க எஸ்ஐஆர் விவகாரங்களை விசாரித்த தமிழகத்தை சேர்ந்த தேர்தல் தீர்ப்பாய மாஜி தலைமை நீதிபதி விலகல்: மேல்முறையீட்டு மனுக்கள் விசாரிக்கப்படுமா?

 

கொல்கத்தா: தேர்தல் தீர்ப்பாயப் பணிகளிலிருந்து விலகுவதாக கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் வாக்காளர் அடையாளப் பதிவேடு தொடர்பான மேல்முறையீடுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட எஸ்.ஐ.ஆர்., தீர்ப்பாயத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பணியாற்றி வந்தார். முன்னதாக, வடக்கு 24 பர்கானா மற்றும் கொல்கத்தா பகுதிகளுக்கான மேல்முறையீடுகளை விசாரிக்க இவர் நியமிக்கப்பட்டார். பின்னர், உச்சநீதிமன்ற உத்தரவின்படி மால்டா, முர்ஷிதாபாத் மற்றும் பீர்பூம் மாவட்ட வழக்குகளையும் விசாரித்தார்.

கடந்த 22 நாட்களில் மட்டும் 1,777 மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த இவர், ஒரு மனுவை கூட நிராகரிக்கவில்லை. இதில் பராக்கா சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., முகமது மகதாப் ஷேக், புகழ்பெற்ற ஓவியர் நந்தலால் போஸின் பேரன் சுப்ரபுத்தா சென் மற்றும் அவரது மனைவி தீபா சென் ஆகியோரின் வாக்குரிமையை மீட்டெடுத்தார். மேலும், ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி’ அமைப்பைச் சேர்ந்த 30 கன்னியாஸ்திரிகளின் மனுக்களையும் ஏற்று வாக்களிக்க அனுமதி அளித்தார். இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் நேற்று அறிவித்தார். இது தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சுஜாய் பால் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.

தனது ராஜினாமா குறித்து அவர் கூறுகையில், ‘தற்போதுள்ள வேகத்தில் செயல்பட்டால் கொல்கத்தா மேல்முறையீட்டு மனுக்களை மட்டும் முடிக்க 4 ஆண்டுகள் ஆகும். இன்னும் 1 லட்சம் மனுக்கள் நிலுவையில் உள்ளன. ஆன்லைன் போர்ட்டலில் வார்த்தை கட்டுப்பாடுகள் இருப்பதால், விரிவான உத்தரவுகளை வழங்க முடிவதில்லை. இதற்காக நான் 4 அல்லது 5 வரிகளில் உத்தரவுகளை வழங்கி வந்தேன். தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை பணியாற்றியதோடு, ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊழியர்கள் இன்றி வழக்குகளை முடித்தேன். தொழில்நுட்ப ரீதியாக சில சிக்கல்கள் இருந்தாலும் மாநில அரசின் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை திரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

Related Stories: