மதமாற்றம், பலாத்கார வழக்கில் பிரபல ஐடி நிறுவன பெண் அதிகாரி கைது: மகாராஷ்டிராவில் பரபரப்பு

 

நாசிக்: மதமாற்றம் மற்றும் பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய டிசிஎஸ் நிறுவன ஊழியர் நிதா கான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களை குறிப்பிட்ட மதத்திற்கு மாறக் கட்டாயப்படுத்தியது மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக மொத்தம் 9 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்களை மதமாற்றம் செய்யத் தூண்டியது, அவர்களுக்குப் புர்கா வழங்கி ‘நமாஸ்’ செய்யக் கற்பித்தது மற்றும் ஒரு பெண்ணின் பெயரை ‘ஹனியா’ என்று மாற்றி அவரை மலேசியாவிற்கு அனுப்ப வியூகம் வகுத்தது எனப் பல புகார்கள் நிதா கான் (பிராசஸ் அசோசியேட்) மீது எழுந்தன.

இது தொடர்பாக ஏற்கனவே டேனிஷ் ஷேக் மற்றும் தவுசிப் அத்தார் உட்பட மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது ஊழியர்களை இடைநீக்கம் செய்துள்ளதுடன், டெலாய்ட் மற்றும் டிரைலீகல் போன்ற நிறுவனங்களின் உதவியுடன் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் தலைமறைவாக இருந்த நிதா கானின் முன்ஜாமீன் மனுவை நாசிக் நீதிமன்றம் கடந்த 2ம் தேதி தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், நேற்றிரவு சத்ரபதி சம்பாஜிநகரில் வைத்து நிதா கானைக் கைது செய்தனர். போலீஸ் காவலில் எடுப்பதற்காக அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தனிக் குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: