வேதாரண்யத்தில் திடீர் கனமழை – உப்பு உற்பத்தி கடுமையாக பாதிப்பு

நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் திடீரென பெரிது கனமழை காரணமாக உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த திடீர் மழையால் உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

அகஸ்தியன்பள்ளி, கோடியன்காடு உள்ளிட்ட சில முக்கிய பகுதிகளில் சுமார் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில், மழை நீர் உப்பு பாத்திகளில் தேங்கியதால், உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். உப்பு தயாரிக்கத் தயாராக இருந்த பாத்திகளில் மழைநீர் புகுந்ததால், உப்பு மீண்டும் தண்ணீராகக் கரைந்துவிட்டது.

மழையினால் உப்பு பாத்திகள் கரைந்து சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட உப்பள தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். திடீர் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள நிலையில், மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க ஒருவாரம் ஆகும் என தொழிலாளர்கள் கூறி இருக்கிறார்கள்.

சாதாரண காலங்களில் ஆண்டுக்கு சுமார் 6.5 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படும் நிலையில், இந்த பருவம் தவறிய மழையினால் உற்பத்தித் திறன் 35% முதல் 40% வரை குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். ஒரு முறை உற்பத்தி செய்ய வேண்டிய உப்பு, மழையினால் மீண்டும் பழைய நிலைக்குச் செல்வதால் பழைய உற்பத்தி நிலைக்கு கொண்டுவருவது என்பது ஒரு மாதத்திற்கு மேல் தள்ளிப் போகிறது என்றும் தொழிலாளர்கள் கூறி இருக்கிறர்கள்.

Related Stories: