ஊட்டியில் 138வது நாய் கண்காட்சி நாளை துவக்கம்: 55 வகைகள் கொண்ட 435 நாய்கள் பங்கேற்பு

ஊட்டி: 138வது நாய்கள் கண்காட்சி நாளை 8ம் தேதி துவங்கி 3 நாட்கள் ஊட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக ஆண்டுதோறும் கோடை விடுமுறையின்போது தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா, பழம், காய்கறி மற்றும் வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்படுகிறது. இதுதவிர, படகு போட்டி, படகு அலங்கார போட்டி ஆகியவை நடத்தப்படுகிறது. இவற்றை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைகின்றனர். அதே சமயம் சில தனியார் அமைப்புகள் சார்பிலும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. நாய் கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் ஊட்டியில் நடத்தப்படுகிறது.

குறிப்பாக, ஆண்டுதோறும் சவுத் இந்தியன் கேனல் கிளப் சார்பில் நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாளை (8ம் தேதி) துவங்கி மூன்று நாட்கள் நாய் கண்காட்சி நடக்கிறது. 8ம் தேதி கீழ் படிதல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 9 மற்றும் 10 ஆகிய இரு நாட்கள் பல்வேறு வகையான நாய்களின் அணிவகுப்பு மற்றும் கண்காட்சி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த 435 நாய்கள் பங்கேற்கின்றன. காமன் அவுண்ட், சிப்பிபாறை, கோம்பை, கன்னி, மதுல் அவுண்ட், பாஸ்னி, ராஜபாளையம், ராம்பூர் அவுண்ட் உட்பட 55 வகைகளை கொண்ட நாய்கள் பங்கேற்கிறது. மேலும், இந்த ஆண்டு புதிதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த செப்பர்க், பிரேசில் நாட்டை சேர்ந்த பெராட் டி பிரஸ்சினரியோ ஆகிய இரு நாய் வகைகள் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன. இப்போட்டிகளில் ஆஸ்திரேலியா, கசக்கிஸ்தான், அசர்பென்சான் ஆகிய நாடுகளை சேர்ந்த நடுவர்கள் கலந்துகொள்கின்றனர் என சவுத் இந்தியன் கேனல் கிளப் தலைவர் ரஜனி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ெசயலாளர் மோத்தேஷ் ஆகிேயார் தெரிவித்தனர்.

Related Stories: